கயல் பருகிய கடல்
கயல் பருகிய கடல், மாலன், கவிதா பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 130ரூ.
நூலாசிரியர் பல்வேறு கட்டங்களில் எழுதிய 18 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். முதல் கட்டுரையில் பாரதியே நவீன சிறுகதையின் முன்னோடி என விளக்குவதோடு நிற்காமல் வ.வே.சு. அய்யரின் ஐரோப்பியத் தாக்கத்தை ஆதாரப் பூர்வமாகக் கூறியிருப்பது நூலின் தனிச்சிறப்பாகும். புதுமைப்பித்தனும், சமீபத்தில் மறைந்த ஜெயகாந்தனும் எந்த அடிப்படையில் வேறுபடுகிறார்கள், அவர்களது வாழ்க்கைச் சூழல் அவர்களது எழுத்தை எந்த வகையில் வேறுபடுத்துகிறது என்பதை மிக நுட்பமாக விளக்கியிருக்கிறார். கயல் பருகிய கடல் எனும் கட்டுரையில் ஆசிரியர் எழுப்பும் கேள்விகள் இன்றைய படைப்பாளிகளை மட்டுமல்ல, இலக்கியப் படிப்பாளிகளையும் சிந்திக்க வைப்பவை. அதில், தனிமனித வழிபாட்டுச் சிந்தனையில் தமிழர் சிக்கியது, அவர் தம் இலக்கியத்திலும் எதிரொலிப்பதையே அவரது கேள்விகள் முன் வைக்கின்றன. பாரதியின் மரணம் எழுப்பும் கேள்விகள் எனும் கட்டுரையில் பாரதி தனது எழுத்தை எந்த அளவுக்கு நேசித்திருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கலாசாரம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகனுடன், நூலாசிரியர் நடத்திய எழுத்துக் கலந்துரையாடலில் வெகுஜனங்களை நெருங்க வேண்டுமானால் அவர்கள் மொழியில் பேசவும், எழுதவும் வேண்டும் என்கிறார். நூலாசிரியரின் இத்தகைய கருத்துகள் ஜெயமோகனுக்கு மட்டுமல்ல, தற்போதைய படைப்பாளிகள், படிப்பாளிகள் என அனைவருக்குமே பொருந்தும். கயலுக்குள் புகுத்தப்பட்ட இலக்கியக் கடல் இந்நூல். நன்றி: தினமணி, 4/5/2015.