கீதாஞ்சலி
கீதாஞ்சலி, தாகூர், தமிழில் சி. ஜெயபாரதன், தாரிணி பதிப்பகம், சென்னை, பக். 144, விலை 125ரூ.
இரவீந்திரநாத் தாகூர் நோபல்பரிசு பெற்ற கவிதைத் தொகுப்பு நூல். தேசம், மொழி, இன்பம், துன்பம், அன்பு, நட்பு, கருணை, ஆன்மா, ஆற்றாமை, காத்திருப்பு, மரணம் என வாழ்வின் அனுபவங்களை தாகூர் அளவிற்கு உணர்வுபூர்வமாக யாரும் எழுதிவிடமுடியாது என்பதற்கான சாட்சியே இக்கவிதைகள். வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து, வாழ்க்கைப் பயணத்தின் முடிவுக்கு காத்திருக்கும் வரையில் விழிப்புணர்வு மிக்க கீதங்கள் இவை. இறுகிப்போன வயலை உழும் உழவன், வேர்வை சிந்தி கல்லுடைக்கும் தொழிலாளி, வெயிலிலும் மழையிலும் உழைக்கும் உழைப்பாளி இவர்களோடுதான் இறைவன் குடியுள்ளான் என்ற தாகூரின் ஆன்மிகத் தேடலின் தரிசனங்கள் யாவரையும் உணர்ச்சி கொள்ளச் செய்யும் தமிழில் கீதாஞ்சலியைத் தந்திருக்கும் ஜெயபாரதன் போற்றுதலுக்குரியவர். நன்றி: குமுதம் 7/5/2014.
—-
இந்திரா சந்திரா மந்திரா, ஜெயந்தி (கல்கி ராஜேந்திரன்), கல்கி பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 50ரூ.
இந்திராவும் சந்திராவும் பள்ளிச் சிறுவர்கள். அவர்கள் இக்கட்டில் சிக்கும்போதெல்லாம் மந்திரா என்ற தேவதை அவர்களுக்கு உதவி செய்கிறது. இந்த கற்பனைக் களத்தை மையமாக வைத்தே இந்நூல் நகர்கிறது. கென்யாவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றிப் பார்க்கும்போது, அங்குள்ள விலங்குகளை சில கொடிய சுயநலவாதிகள் கொல்வதை பார்க்க நேரிடுகிறது. அந்தக் கொடியவர்களிடமிருந்து விலங்குகளையும், தங்களையும் காத்துக் கொள்ள அவர்கள் மந்திராவின் உதவியை நாடுகிறார்கள். வெறும் குழந்தைகள் கதையாக மட்டுமில்லாமல், அறிவியல், சமூக பொறுப்புடன் நூலாசிரியர் இந்நாவலை படைத்திருப்பது சிறப்பு. கற்பனையான மந்திர சக்தியைக் கொண்டு குழந்தைகளுக்கு அறிவுப்பூர்வமான விஷயங்களைச் சொல்ல இந்த உத்தி கைகொடுத்திருக்கிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம் 7/5/2014.