கோரா

கோரா, இரவீந்திரநாத் தாகூர், தமிழில் கா. செல்லப்பன், சாகித்ய அகாதெமி, சென்னை, பக். 704, விலை 350ரூ.

புதிய இலக்கிய வகையான நாவல் இந்தியாவில் அறிமுகமானபோது எழுதப்பட்ட ஆரம்பகாலப் புதினங்களுள் ரவீந்திரரின் கோராவுக்கு (1909) முக்கிய இடமுண்டு. விடுதலைப் போராட்டக் காலத்தில் உருவான பெரும்பாலான இலக்கியப் படைப்புகளைப் போலவே, ரவீந்திரரின் புதினத்திலும் சமூக அக்கறையும் தேசிய விழிப்புணர்வும் மிளிர்கின்றன. நாடு – உலகம், சாதி – மதம், ஆண் – பெண் உறவுகள், முற்போக்கு – பிற்போக்கு எனப் பலதரப்பட்ட வாழ்வின் அடிப்படை அடையாளச் சின்னங்களை இந்நாவலின் கதை மாந்தர்கள் அலசி ஆராய்கின்றனர். சனாதனியாகவும், சமுதாய மாற்றம் விரும்பும் இளைஞானகவும் ஒரு சேர காணப்படுத் தீவிர இந்துவாக வளரும் கதாநாயகன் கோரா, புதினத்தின் இறுதிக்கட்டத்தில் தான் பிறப்பால் ஜரிஷ்காரன் என்பதை உணர்ந்து நொறுங்கும்போது, வாழ்க்கையின் பொருளின்மை புலப்படுகிறது. ஆயினும், பாரதவர்ஷத்தின் (பாரதத்தின் பழம்பெயர்) மடியில் அவன் தஞ்சமடைகிறான். அவனை தனது மகனாக ஏற்கிறாள் பாரத அன்னையின் உருவகமாக ரவீந்திரரால் படைக்கப்பட்ட சுசரிதா. மதம், கொள்கை சித்தாந்தங்களைவிட மனித உறவுகளும், அறமுமே முக்கியம் என்பதை நிலைநாட்டுவதில் கோரா வெற்றிபெறுகிறது. இந்நாவலின் நிகழ்வுகளினூடே அரசியல், சமூகவியல், தத்துவ விவாதங்களை ரவீந்திரர் நுழைத்துள்ள பாங்கு வியக்கவைக்கிறது. ரவீந்திரரின் எதிர்கால நிலைப்பாடான உலகப் பொதுமறைச் சிந்தனை நோக்கி புதினம் வளர்வதையும் காணமுடிகிறது. வரலாற்றை உருவாக்குவது, உயர்ந்த தரிசனத்தை முன்வைப்பது, முழுமையை நோக்கிச் செல்லும் வடிவம் கொண்டிருப்பது என நாவலின் இலக்கணத்தை இந்நூல் நிறைவு செய்கிறது. தமிழுலகுக்கு நல்லதொரு புதுவரவு. நன்றி: தினமணி, 3/8/2015.

Leave a Reply

Your email address will not be published.