தாயுமான சுவாமிகள் பாடல் அரிய பழைய உரை

தாயுமான சுவாமிகள் பாடல் அரிய பழைய உரை, பதிப்பாசிரியர் சு. இலம்போதரன், முல்லை நிலையம், சென்னை, பக். 656, விலை 450ரூ.

தாயுமானவரை ஒரு தத்துவ ஞானி, தத்துவ வித்து, ஞானக்கடல், சித்தர் என்றெல்லாம் கூறுவர். அந்த அளவிற்கு அவருடைய பாடல்களில் தத்தவம், சைவ சித்தாந்தம், சித்தர் இலக்கியம் போன்றவை ஆழமாகப் பதிவாகியுள்ளன. அவர் விராலிமலைச் சித்தர்களுடன் நெருங்கிப் பழகியவர். இல்லறத்தானாக இருந்து பின்னர் துறவறம் பூண்டவர். திருவருள் விலாசப் பரசிவ வணக்கம், பொருள் வணக்கம், கருணாகரக் கடவுள், பரிபூரணானந்தம், சின்மயானந்த குரு பதிகம், மௌனகுரு வணக்கம், பராபரக் கண்ணி, பெரிய நாயகிம்மைப் பதிப்பகம், ஆனந்த மானபரம், சுகவாரி, சித்தர்கணம், அகிலாண்ட நாயகிப் பதிகம் முதலிய பதிகங்களைப் பாடியுள்ளார். பக்திச்சுவை, இலக்கியச்சுவை, தத்துவவிளக்கத்தோடு இவருடைய பாடல்களில் நடுநடுவே புராணக் கதைகளும், பழமொழிகளும் இடம்பெற்றுள்ளன. மானுடப் பிறவிதான் எல்லாப் பிறவிகளிலும் மிகவும் உயர்ந்தது – உன்னதமானது. அதனால் தான் ஔவை மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார். கிடைத்தற்கரிய இம்மானுடப் பிறப்பே இறைவனை வணங்கி, வாழ்த்திப் பாட உதவும் உன்னத சாதனமாகும் என்பதால்தான், சித்தர்கணம் என்ற பதிகத்தின் 4ஆவது பாடலில், எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான் யாதினும் அரிதரிதுகாண் இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ? ஏது வருமோ அறிகிலேன் என்று மனம் உருகிப் பாடியுள்ளார். அதனால் இப்பிறவியிலேயே இறைவனைச் சிக்கெனப் பிடித்து உய்வு பெற்றுவிட வேண்டும் என்பதுதான் தாயுமானவர் பாடல்களின் சாரமாக இருக்கிறது. தாயுமானவரின் அனைத்துப் பதிகங்களையும் வரிசைப்படுத்தி பக்க எண்களோடு தனித்தனியாகப் பொருளடக்கத்தில் தந்திருந்தால், (பொருளடக்கம் இல்லாததுதான் குறை) மேலும் சிறப்பாக இருந்திருக்கும். மற்றபடி அரிய உரை, அற்புதமான தொகுப்பு. நன்றி: தினமணி, 22/6/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *