புலன் விசாரணை
புலன் விசாரணை, கவிவேந்தர் கா. வேழவேந்தன், கீதை பதிப்பகம், பக்கம் 184, விலை 100ரூ தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக மக்களால் பேசப்பட்ட, 11 முக்கிய வழக்குகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் நம் காவல்துறை நுணுக்கமான அதிரடி நடவடிக்கைகள் மூலம் செயல்பட்ட விதத்தை மிகவும் சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஆசிரியர். — சிவா ஜைன நுல்களை அறிவோம், அ. சுகுமாரன், ஜைன இளைஞர்மன்றம், தி.நகர். பக்கம் 248, விலை 100 ரூ. இலக்கியங்கள், இலக்கண நூல்கள், நன்னூல்கள், தர்க்க நூல்கள், இசை நூல்கள், நாடக நூல்கள், காவிய நூல்கள், நிகண்டுகள், கணித நூல்கள், ஜோதிட நூல்கள், பிரபந்தங்கள் பற்பல அருந்தமிழ் நூல்களை செய்து அணிகலன்களாக, தமிழ் அன்னைக்கு அணிவித்தவர்கள் சமணர்கள். இவற்றில் பல அழிந்துவிட்டன. இருந்த போதிலும் எஞ்சிய அணிகளிலும் பொலிவாக தோன்றுகிறாள் தமிழ் அன்னை, 60 ஜைன நூல்களைப் பற்றி, கடந்த ஐந்து ஆண்டுகளாக முக்குடை இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அறநெறிச்சாரம், நீலகேசி, நரிவிருத்தம், இனியவை நாற்பது, இன்னா நாற்பது, சூளாமணி, சிறுபஞ்சமூலம், யாப்பருங்காலக் காரியை, நேமிநாதம் போன்ற நூல்கள் சமணர்கள் தமிழுக்கு அளித்த கொடை என்பதை அறியும் போது வியப்படைகிறோம். – எஸ். திருமலை காலம் (ஒரு எளிய அறிமுகம்), முனைவர். எஸ். சுந்தரம், வித்யுத் பதிப்பகம், பக்கங்கள் 128, விலை 100 ரூ. ‘பங்ச்சுவாலிட்டி’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நேரம் தவறாமை, மனித வாழ்வில் மிக முக்கியமானது நேரம் (காலம்) பற்றி நம் முன்னோர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். இந்த நூலில் நாம் பயணிக்கிற வாழ்க்கையோடு, பின்னிப் பிணைந்துள்ள காலத்தைப் பற்றி குறிப்புகள், வேதங்கள், புராண இதிகாசங்கள், பண்டைய தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றில் காலம் எடுத்தாளப்பட்டுள்ள விதங்கள், விஞ்ஞனப் பார்வையில் காலம், காலத்தைக் கணக்கிடும் வெவ்வேறு முறைகள், கருவிகள் ஆகியவற்றைப் பற்றி ஆசிரியர் மிக முனைந்து பல்வேறு செய்திகளைத் திரட்டித் தொகுத்தளித்திருக்கின்றார். நல்ல முயற்சி. – சிவா வளமான வாழ்வு தரும் அதிர்ஷ்ட எண்கள், கே. எஸ். சுப்ரமணி, நர்மதா பதிப்பகம், பக்கங்கள் 128, விலை 50 ரூ. எண் கணிதம் மூலம், ஒவ்வொருவரும் அவர்களது அதிர்ஷ்ட எண் எது என்பதை தெரிந்துக் கொள்ள முடியும். அதற்கு, ஏற்ப அவர்கள் தங்களது பெயரை, அதிர்ஷ்ட எண்ணாய் அமைத்துக் கொண்டால் வெற்றி அடைவார்கள் என்றாலும், முயற்சி செய்யாமல், உழைக்காமல் இருந்தால் அதிர்ஷ்டம் வராது. உழைப்பதில் பேரார்வம் உள்ளவர்களுக்கேஇ அதிர்ஷ்ட எண்கள் அனைத்து நன்மைகளையும் வாரி வழங்குகின்றன, என்ற கருத்தை ஆரம்பித்திலேயே உறுதி படச் சொல்லிவிடுகிறார் ஆசிரியர். – சிவா. திருக்கோவில்கள் 234, சிவ. சுந்தரம், சுந்தரா பதிப்பகம், பக்கங்கள் 400, விலை 170 ரூ. காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, வந்தவாசி, திண்டிவனம், புதுச்சேரி, விழுப்புரம், திருக்கோவிலூல், திருவண்ணாமலை மற்றும் வேலூர் போன்ற மையங்களைச் சுற்றியுள்ள 274 திருத்தலங்களைக் குறித்து சின்னஞ்சிறு குறிப்புகளோடு உள்ளடக்கிய ஆன்மிக பயண கையேடு, திருத்தலயாத்திரை செல்வோர்க்கு நல்ல பயன்பாடு கொடுக்கவல்ல நூல். – குமரய்யா. வெற்றி தரும் எண் கணிதம், பண்டிட் அழகர் விஜய், சுரா பதிப்பகம், பக்கங்கள் 320, விலை 120 ரூ. சாதாரணமாய் எல்லா எண்கணித நூல்களிலும், விவரிக்கப்படும் பிறவி எண், விதி எண், பெயர் எண் என்பவைகளுடன், புதிதாக ஆத்மா எண் என்ற ஒன்றைப் பற்றியும் விவரிக்கிறார் ஆசிரியர். அவரவர் பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை வைத்து, ஆத்மா எண்ணைக் கண்டுபிடிக்கும் முறையையும், ஒன்று முதல் 108 வரை ஒவ்வொரு ஆத்மா எண்ணிற்கும், என்ன பலன் என்றும் விவரிக்கிறார். – மயிலை சிவா நன்றி: தினத்தந்தி, 26-ஆகஸ்ட்-2012