கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்

கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் (கட்டுரைகள்), எச். பீர்முஹம்மது, அடையாளம் வெளியீடுகள், 1205/1, கரூப்பூர் சாலை, புத்தாநத்தம் 621301. விலை 170 ரூ. கிழக்குக் காற்று அரபுலக அறிவு, அரசியல், கலாசார மதிப்பீடுகளைப் பற்றிய பார்வைகள் மீதான பார்வைகள். ஓரியண்டலிசம் அல்லது கீழையியல் என்பது வரமாகவும் சாபமாகவும் உருவான ஒரு கிளவி. தமக்குள் பல்வேறு ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் உடைய ஆசிய நிலப்பரப்பின் சிந்தனைப் போக்குகளை ஒற்றை பரிமாணமாக முத்திரைக் குத்த இந்தச் சொல், மேற்குலகின் மேட்டிமை அறிவுஜீவிகளுக்கு வசதியாக இருந்தது. ஆனால் அதனூடாக கிழக்கின் பாரம்பரியங்கள் பலவற்றை அங்கீகரித்தாக வேண்டிய நிர்பந்தத்தையும் அது அளித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கீழை உலகம் என்பது மேற்காசியா, தெற்காசியா, மத்திய ஆசியா, கிழக்காசியா தென்கிழக்காசியா என எல்லா நிலப்பரப்புகளையும் குறித்தாலும் எட்வர்ட் செய்த் இந்த பொதுதம் பொதுவான போக்குக்கு எதிராக பேசத் தொடங்கியபோது அது பெரும்பாலும் இஸ்லாமிய உலகின் மதிப்பீடுகளையும் கலாச்சாரங்களையுமே குறித்தது. தமிழ்நாட்டிலிருந்து வேலை நிமித்தம் வளைகுடா நாடுகளுக்கு சென்றிருந்த எச். பீர்முஹம்மது இந்த கோட்பாடுகளில் ஆழம் காணத் தொடங்கினார். இஸ்லாம்வாத உலகம் என்று ஒன்றை மேற்கும் ஊடகங்களுக்கும் இஸ்லாமிய அதீதவாதிகளும் சேர்த்து கடந்த தசாப்தத்தில் உருவாக்கினார். இந்த தருணத்தில் ஓரியண்டலிசத்தை மீள்பார்வையாக பார்க்கும் வாய்ப்பை அவர் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டிருக்கிறார். கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் என்கிற இந்த நூலில் அதை அவர் பல்வேறு சிந்தனையாளர்களைப் பற்றிய கட்டுரைகள், பேட்டிகள், விவாதங்கள் மூலம் விரித்திருக்கிறார். எட்வர்ட் செய்த், தாரிக் அலி, இக்பால் அஹ்மத், ஹிசாம் சரபி, இஹாப் ஹசன், சமீர் அமீன், லென்னி பிரன்னர், மன்சூர் ஹிக்மத், மாக்சிம் ரோடின்சன், தாஹா உசேன் ஆகியோரின் உலகத்தை இந்த நூல் நம்முன் வைக்கிறது. 2011ன் பிரதான வரலாற்று நிகழ்வான அரபுலக வசந்தத்துக்கு முன்பாக எழுதப்பட்டிருந்தாலும், பின் நிகழ்ந்த நிகழ்வுகளை புரிந்து கொள்வதற்கான அம்சங்களையும் கீழைச் சிந்தனையாளர்கள் கொண்டிருந்தார்கள் என்பதை நம்மால் உய்த்துணரமுடிகிறது. “அரபு தெருக்களின்” இடத்தில் அது தாரீர் சதுக்கங்களை வைத்தது. இன்னொரு பக்கம் அடிப்படை இஸ்லாம்வாதமும் மரபுரீதியிலான ஏகாதிபத்திய எதிர்ப்பு முறைகளும் அரபுலக வசந்தத்தில் பின்தங்கியதைப் புரிந்து கொள்ளக்கூட இந்த நூல் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, எகிப்திய அறிஞர் சமீர் அமீன் உலகமயமாதலை பார்க்கும் பார்வை, பாரம்பரிய இந்திய மார்க்சிய வாதிகளின் பார்வையிலிருந்து வேறுபட்டது. அரபுலகின் விடுதலையுணர்வுக்கு எதிராக இருக்கும் ஜியோனிசமும் மேற்கத்திய நவகாலனிய ஆதிக்கமும் உலகின் பிரதான எதிரிகளாகவே இருந்துவருகின்றன. ஆனால் லத்தீன் அமெரிக்காவிலும் ஆஃபிரிக்காவிலும் தெற்காசியாவிலும் அவற்றுக்கு எதிரான யுத்தம் வெறும் பொருளாதார யுத்தமாக குறுக்கப்பட்டுவிட்டது. கிழக்கு, தென்கிழக்காசியா அவற்றிடம் அடிபணிந்துவிட்டது. கலாச்சாரரீதியிலும் அரசியல்ரீதியிலும் இன்று அவற்றை எதிர்கொண்டிருப்பது மேற்காசியாதான். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒரு சதவீதமும் ஏற்றுக்கொள்ள இயலாத சூழலிலும் இதுதான் உண்மை. இந்த யுத்தம் அங்கே நடைபெறுவதற்கான மூல காரணங்களில் அரபுலக அறிவுஜீவிகளின் பங்கு அளப்பரியது. குறிப்பாக சமீர் அமீன், தாரிக் அலி, லென்னி பிரன்னர், நோம் சோம்ஸ்கி ஆகியோருடன் நேரடியாக உரையாடிய அனுபவம், இந்த நூலின் முன்னுரையில் ஆசிரியர் கூறியிருப்பதுபோல, “இத்தொகுப்பை அதிகம் கவனப்படுத்துகிறது.” புதிய விவாதங்களுக்கான களனையும் உருவாக்கியிருக்கிறது இந்நூல். — நீள் தினம், பூமா ஈஸ்வரமூர்த்தி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் 1. விலை 60 ரூ. தங்க நிறத்தில் மலம் கழித்து சற்ற தள்ளி அமரும் குழந்தை, தாழ் நீக்கிக் காத்திருக்கும் காமம் என்பன போன்ற ஆச்சரிய ஈர்ப்புள்ள வரிகளுடன், வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களை கவிதையாக்கி இருக்கிறார் பூமா ஈஸ்வரமூர்த்தி. கூறப்பட்டதுபோல, வெளிச்சத்தில் தெரியும் வெளிச்சமான கவிதைகள். — கறைபடிந்த கரங்களா, சக்தி கே கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ் பவுண்டேஷன், 21, 10வது தெரு, பெரியார் தெரு, சென்னை 82. விலை 45 ரூ. பள்ளி மாணவர்களுக்கான வரலாற்று நாடகங்களக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அந்த பாணியில் இந்தியாவில் காலனிய ஆட்சி உருவாக மிகவும் முக்கிய காரணமாக இருந்த ராபர்ட் கிளைவின் வரலாற்று நாடகமாக்கியிருக்கிறார் நூலாசிரியர். கிளைவின் ஆட்சி பரபரப்பான ஒன்று என்பதால் நாடகம் போட உகந்து ஒன்றுதான். தொகுப்புசெ. . செந்தில்நாதன் நன்றி: பிப்ரவரி 8, 2012- இந்தியா டுடே.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *