மண்ணுக்கேற்ற மார்க்சியம்
மண்ணுக்கேற்ற மார்க்சியம், அருணன், வசந்தம் வெளியீட்டகம், மதுரை, பக். 752, விலை 400ரூ.
அருணனி எழுத்து வலிமையான தர்க்க முறைகளைக் கொண்டது. இந்தத் தொகுப்பின் முதல் பார்வையிலேயே அதை உணர முடியும். இலக்கியம், அரசியல், சமூகம், பொருளாதாரம் என எண்ணற்ற விவாதங்களை அவர் இத்தொகுதியில் நிகழ்த்துகிறார். 750 பக்கங்களுக்கு விரிவ9டகின்ற இந்நூல் 103 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. சோவித் யூனியன் சரிந்து விழுந்த பின்னரும் மார்க்சீயம் சார்ந்த தன்னுடைய உறுதியை அது வெல்லும் என்ற நம்பிக்கையை அருணன் தொடர்ந்து எழுதிவருகிறார். மார்க்சியம் வெறும் தத்துவமாக மட்டுமில்லாது அது சமூக மாற்றத்திற்கான கருவியாகவும் இருப்பதால் அவர் தன் கட்டுரைகள் முழுவதையும் அதனடிப்படையிலேயே எழுதுகிறார். அரசியல், பொருளாதாரம், வரலாறு, கலை, இலக்கியம், தத்துவம் என்று ஏராளமான துறைசார்ந்த விஷயங்கள் படிக்க சுவையான வகையில் எழுதப்பட்டுள்ளன. ஒரு வகையில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு கையேடாகவும் விளங்கும் அதே சமயத்தில் ஒரு பொது அறிவுக்கான தகவல் களஞ்சியமாகவும் விரிகிறது இந்நூல். இக்கட்டுரைகளில் பல, மற்றவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு அல்லது தவறான புரிதல்களுக்குப் பதிலளிக்கும் முகமாக எழுதப்பட்டுள்ளன. அவ்வாறான பதில்களை இலக்கிய அல்லது வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவ முயல்கிறார். அத்தனையும் எளிய வார்த்தைகளால் விளக்க முயல்வது குறிப்பிடத்தக்க அம்சம். இந்த எளிமை பெரும்பாலான மார்க்சிய எழுத்தாளர்களுக்கு இல்லை என்பது தொடர்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. தீபாவளி, பொங்கல், மே தினம் ஆகிய மூன்றும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டவை. மாற்றாக முன்வைக்கப்படும் விழாக்களை மக்கள் சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை அவர் விளக்கும் விதம் சிறப்பானது. தமிழால் தத்துவம் பேச முடியும். ஞானம் என்றால் அது எத்திசையிலிருந்து வந்தாலும் தமிழன் வரவேற்றான். அதைத் தன்வயப்படுத்தி தமிழகத்துக்குத் தந்தான் என்று கூறம் அருணன், இந்த வரலாற்று உண்மையை இளந்தலைமுறைத் தமிழர்களுக்குச் சொல்வது தத்துவ ஆர்வலர்களின் முதற்பெரும் பணி என்கிறார். சொல்லியவண்ணம் தானே முன்வந்து இந்நூலில் அவர் செய்தும் காட்டியிருக்கிறார். -களந்தை பீர் முகம்மது. நன்றி: தமிழ் இந்து, 6/9/2014.