அகப்பொருள் விளக்கம்
நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம், பதிப்பாசிரியர் க.வெள்ளைவாரணன், பாரி நிலையம், பக். 360, விலை 200ரூ.
தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியமே இன்றைக்கு முதன்மையான இலக்கண நூலாகவும் காலத்ததால் மிகவும் தொன்மையான நூலாகவும் திகழ்கிறது. தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்றுக்கும் இலக்கணம் வகுத்துள்ளார். பிற மொழி இலக்கண நூல்களில் இல்லாத தனிச்சிறப்பு வாய்ந்தது தொல்காப்பியத்தில் உள்ள பொருளிலக்கணம். இது தமிழுக்கே – தமிழருக்கே உரித்தான அக வாழ்க்கை பற்றி தமிழரின் காதல் வாழ்வின் மேன்மைகளைப் பற்றி விரித்துரைக்கிறது. தொல்காப்பியத்தின் இலக்கணக் கூறுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்து பிற்காலத்தில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி பற்றிய தமிழ் இலக்கண நூல்கள் பல இயற்றப்பட்டன. அந்த வகையில், தொல்காப்பியத்தில் விரிவாகக் கூறப்படும் அகப்பொருள் இலக்கணத்தினையும், அதன்வழித் தோன்றிய இறையனார் களவியல் உரையினையும் சங்கத்தொகை நூல்களான பாண்டிக்கோவை, திருச்சிற்றம்பலக்கோவை முதலிய அகப்பொருள் இலக்கியங்களையும் நன்கு ஆராய்ந்து, அகத்திணை இலக்கணங்களை வகைப்படுத்தி விரித்துரைக்கும் முறையில் நாற்கவிராசநம்பியால் இயற்றப்பட்டதுதான் அகப்பொருள் விளக்கம் என்ற இந்நூல். அகப்பொருள் விளக்கத்தின் நூற்பாக்களுக்கு தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகை, தஞ்சைவாணன் கோவை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, திருக்குறள் முதலிய பல இலக்கியங்களிலிருந்து பாடல்களை மேற்கோள் காட்டி விளக்கியிருப்பது நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. அகப்பொருள் இலக்கணம் கற்பவருக்கு மிகவும் பயன்படும் நூல். நன்றி: தினமணி, 11/12/15.