அஞ்சாத சிங்கம் சூர்யா
அஞ்சாத சிங்கம் சூர்யா, தொகுப்பாசிரியர் நா. சிபிச்சக்கரவர்த்தி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 160, விலை 100ரூ.
அஞ்சாத சிங்கம் சூர்யா என்ற பெயரில் வெளியாகியிருக்கும் சூர்யாவின் திரைப்பட டைரி ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்த சூர்யாவின் பேட்டிகள், அவரைப் பற்றிய செய்திக் கட்டுரைகள் மற்றும் அவர் நடித்த படங்களின் விமர்சனங்கள் அடங்கிய தொகுப்பாகும். சூர்யாவின் முதல் படத்திலிருந்து சமீபத்திய அஞ்சான் வரை அவரது திரையுலக வாழ்க்கை விவரிக்கும் இந்த நூலுக்கு சூர்யாவின் திரைப்பட டைரி 2014 என்று துணைத் தலைப்பு கொடுத்திருப்பது ஏன் என்றுதான் புரியவில்லை. சூர்யா நான்காம் வகுப்பு படிக்கும்போது பள்ளி விழா ஒன்றில் பங்கேற்கையில் அவருடைய தந்தை சிவகுமாரே எடுத்த அரிதான புகைப்படம் ஒன்று முதல் அத்தியாத்திலேயே இடம் பெற்றிருக்கிறது. படத்தைவிட அது பற்றி சிவகுமார் சொன்ன தகவல்தான் மிகவும் சுவாரஸ்யம். என் பிள்ளைகளை நடிப்பு, கலை, இசை இதையெல்லாம் இரண்டாவதாகத்தான் வெச்சுக்கச் சொல்லிகிட்டு வர்றேன். முதலில் படிப்புதான். அவங்க நல்ல படிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. மற்ற திறமைகள் தானா வந்துவிடும். நடிகராக வரவேண்டும் என்ற எண்ணமே இல்லாத சூர்யா, படிப்பு முடிந்ததும் அயத்த ஆடை நிறுவனத்தில் ஐயாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்குப் போனதும் எதிர்பாராமல் நடிகனாகி முதல் படமான நேருக்கு நேர் வெளியான திரையரங்குக்கு சென்றபோது ஒரு ரசிகர் தலைவா முதல் படத்திலேயே சூப்பரா சொதப்பி இருக்கீங்க வாழ்த்துக்கள் என்று சொன்னபோது அழுகையை அடக்கிகொண்டு திரும்பிய தகவலும் இதில் உண்டு. அந்த சூர்யா இன்று அஞ்சாதவன் வரை பயணித்திருக்கும் பாதையில் இருந்த ரோஜாக்களையும் முள்களையும் இந்த நூல் விவரிக்கிறது. பள்ளியில் படிக்கும்போதும் லயோலா கல்லூரியில் படிக்கும்போதும் சராசரி மாணவனாகவே இருந்த சரவணன், சூர்யா என்ற நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகராகப் பரிணமித்திருப்பது படிப்பதற்கு சுவாரஸ்யமான முறையில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே படித்த செய்திகள் என்றாலும், பார்த்த புகைப்படங்கள் என்றாலும், அவற்றையெல்லாம் சேர்ந்தாற்போல் மீண்டும் ஒரு முறை படிப்பது ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. நன்றி: தினமணி, 3/11/2014.