அதிசயம் நிகழ்ந்த அற்புத திருக்கோயில்கள்
அதிசயம் நிகழ்ந்த அற்புத திருக்கோயில்கள், சிவப்பிரியா, தென்னவர் திருநெறிப் பதிப்பகம், புதுதில்லி, பக். 752, வி 380ரூ.
நாட்டின் வட கோடி எல்லையில் உள்ள கயிலை மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள அமரநாதம் தொடங்கி தென் கோடியில் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதர் கோயில் வரை 300க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு நேரில் சென்று வழிபட்டு அக்கோயில்களின் சிறப்பைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் சமயக் குரவர்கள் பாடியுள்ளதை (உ.ம்: ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும், தாயே ஆகி வளர்த்தனை போற்றி – முசிறி அருகே ஈங்கோய் மலையார் கோயில் பற்றி திருவாசகம்) பொருத்தமாக எடுத்துக் காட்டியுள்ளார். திருத்தலத்தின் பெயர்க்காரணம் (ராவணன் மகன் இந்திரஜித், இந்திரன் ஆகியோரின் அபசாரங்களைப் பொறுத்து, அருள்புரிந்ததால் குற்றம் பொறுத்த நாதர் – தலைஞாயிறு), வழிபட்டால் கிடைக்கும் பலன் (3 குளங்களிலும் ஈசன் நினைவோடு முழுகி எழுந்து திரு வெண்காட்டீசரை வழிபட்டால் பிள்ளை வரம் மட்டுமின்றி எண்ணமெல்லாம் ஈடேறும் என்கிறார் சம்பந்தர்) அந்தந்தக் கோயில்களில் நிகழ்ந்த அற்புதங்கள் (உ-ம்:திருஞானசம்பந்தர் அம்மையின் மூலம் ஞானப்பால் உண்ட சீர்காரி பிரம்மபுரீசர் கோயில்), கோயிலில் உள்ள சந்நிதிகள், அவற்றின் சிறப்புகள் பாங்குற எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. எந்தக் கிழமையில், எந்தக் கோயிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் சிறப்பு என்பது (உ-ம்: சனிக்கிழமையில் தியாகராசர்) காரணத்துடன் விளக்கப்பட்டுள்ளது. அந்தந்தக் கோயில் தொடர்பான படங்கள் நூலுக்கு அணி சேர்க்கின்றன. மொத்தத்தில் சிவ பக்தர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினமணி, 17/11/2014.