அரங்கியல் நோக்கில் கபிலர் பாடல்களில் காணலாகும் கதை மாந்தர்கள்
பாரதியாரின் பாதையிலே, ம.பொ. சிவஞானம், பக்.136, ம.பொ.சி. பதிப்பகம், சென்னை – 41; விலை ரூ. 75
விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம், மகாகவி பாரதியாருக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அவர் நடத்திய ‘செங்கோல்’ வார இதழில் வெளிவந்த கட்டுரைகள் இவை. பல்வேறு கோணங்களில் பாரதியின் பாடல்களை ஆராய்ந்து தான் கண்ட முடிவுகளை இத்தொகுப்பில் வெளியிட்டிருப்பதாக, முன்னுரையில் ம.பொ.சி. குறிப்பிடுகிறார். பாரதியின் கவிதைகள் மட்டுமல்லாது, அவரது கதை, கட்டுரைகளிலிருந்தும் பல மேற்கோள்களை தனது ஆய்வுக் கட்டுரைகளில் சுட்டிக் காட்டுகிறார். இக்கட்டுரைகள் அனைத்தும், பாரதி இலக்கியச் சுவையைப் பருகிய களிப்பில் மிளிர்கின்றன. குறிப்பாக, நூலின் முதல் கட்டுரையான ‘தெய்வ வள்ளுவரும் தேசியகவி பாரதியும்’ கட்டுரை அற்புதம். வள்ளுவரிலும் பாரதியிலும் தோய்ந்த ஒருவரால்தான் இவ்வளவு ஒப்புமைகளை வெளிப்படுத்த முடியும். ‘பாரதியார் கண்ட மகாகவிகள்’ கட்டுரையிலும் அறிஞரின் ஆய்வுத்திறன் ஒளிர்கிறது. கம்பனையும் இளங்கோவையும் பாரதி ஆழக் கற்றறிந்தவர்கள் என்பதற்கு இக்கட்டுரையே ஆதாரம். ‘பாரதியாரும் பாரதிதாசரும்’ கட்டுரையில், பாரதியின் அரசியல் விடுதலைக் கொள்கைக்கு வாரிசாக மாறுவதற்கு பாரதிதாசன் தவறிவிட்டார் என்று மதிப்பிட்டிருப்பது ம.பொ.சி.யின் நேர்மைத் துணிவுக்கு உதாரணம். இந்நூலில் உள்ள ‘காலத்தை வென்ற கவி’, ‘பாரதி படைத்த பாரதீயம்’, ‘பாரதியாரிடமும் முரண்பாடா?’, ‘பாரதியாரும் சிதம்பரனாரும்’ போன்ற கட்டுரைகள் தமிழ் ஆர்வலர்களுக்கு என்றும் திகட்டாதவை. எனினும், நூலில் அதிகமாகக் காணப்படும் அச்சுப் பிழைகள் நெருடலை ஏற்படுத்துகின்றன. தமிழுக்காகவே வாழ்ந்த பெரியோர் குறித்த நூலில் இத்தகைய பிழைகளைத் தவிர்ப்பது நல்லது.
—
அரங்கியல் நோக்கில் கபிலர் பாடல்களில் காணலாகும் கதை மாந்தர்கள், இரா.திராவிடராணி, பக்.224, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 113; விலை ரூ.100
சங்க இலக்கியங்கள் – தமிழ்ச்சமூகத்தின் கலைப் பண்பாட்டு, நாகரிக வரலாற்றைக் காட்டும் பதிவுகள். கணிசமான எண்ணிக்கையிலான சங்கப் பாடல்களைப் பாடி, தனிச்சிறப்பு பெற்றவர் குறிஞ்சிக் கோன் எனப் புகழப் பெறும் கபிலர். அகவாழ்வைப் பற்றிய அவரது பல்வேறு பாடல்கள் ஒரு நீண்ட, முழுமையான நாடகத்தின் தனித்தனிக் காட்சிகள் போலவும், பாட்டு வரிகள் நாடக மாந்தர்களின் உரையாடல் போலவும் இருப்பது கண்கூடு. அப்பாடல்களை மரபுநெறி மீறாமல் ஆராய்ந்து சுவைபட கட்டுரைகளாக்கியுள்ளார் நூலாசிரியர். தமிழ் நாடகத்தின் தொன்மைச் சிறப்புகளை வெளிக்கொணரும்விதமாக அந்தக் காலம் தொடங்கி தமிழ் நாடகம் குறித்த பல்வேறு வியத்தகு செய்திகள் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டி, அருந்தமிழ் நாடகப் பிரியர்களுக்கு நல்விருந்து. நன்றி: தினமணி 19-11-12