ஆசிரியர்களே அச்சாணிகள்
ஆசிரியர்களே அச்சாணிகள், தொகுப்பாசிரியர் சுவாமி வி. மூர்த்தானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 216, விலை 75ரூ.
நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கக்கூடியவர்கள் மாணவர்கள். அந்த மாணவர்களை உருவாக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள். சிறந்த மாணவர்களை உருவாக்க ஆசிரியர் என்ன செய்ய வேண்டும் என்பதை மிக எளிமையாகக் கூறும் நூல். உண்மையான கல்வி எது? என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. கல்வி – சமூகம் – ஆசிரியர் – மாணவர் தொடர்பான 36 கட்டுரைகளை பல்துறை அறிஞர்கள் எழுதியிருக்கின்றனர். பிள்ளைகளை எவ்வளவு வேண்டுமானாலும் கண்டிக்கலாம், ஆனால் தண்டிக்கவே கூடாது. மாணவனின் மனதில் தனக்கு இது வராது என்ற எண்ணம் பதிந்துவிட்டால் அதை அழிக்க வேண்டியது ஆசிரியரின் வேலை. ஓர் ஆசிரியர் கற்பிப்பவர் மட்டுமின்றி, தன் மாணவர்களை உயர்பண்புகள் கொண்ட மதிப்புமிகு குடிமகன்களாக உருவாக்குபவர். ஆசிரியர்களே, நீங்கள் ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம் தர வேண்டும். அவர்களது ஆற்றலைப் புரிந்து கொண்டு நீங்கள் செயல்பட்டால் அவர்கள் மனதை உங்களால் வெல்ல முடியும். மாணவரிடம் தன்னம்பிக்கையை, மன உறுதியை வளர்ப்பதற்கு அறிவாற்றல் மட்டும் போதாது. மாணவர்களின் அறிவாற்றலை மன ஆற்றலே உருவாக்குகிறது. எனவே மாணவர்களின் மனதைப் பிடியுங்கள். அவர்களது அறிவை – கவனத்தைப் பிடிப்பீர்கள். இவை போன்ற அருமையான, காலத்துக்குத் தேவையான கருத்துக்களைக் கூறும் சிறந்த நூல். நன்றி: தினமணி, 1/6/2015.