இதய சூத்திரம்

இதய சூத்திரம் (கௌதம புத்தரின் பிரக்ஞா பரமிதா இதய சூத்திரம்), ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 448, விலை 350ரூ.

இந்நூலில் பத்து தலைப்புகளில் கூறப்பட்டுள்ளவற்றை ஓரிரு பத்திகளில் விளக்கிவிட முடியாது. பக்கத்திற்குப் பக்கம் அடிக்கோடிட்டு வைத்து, திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் நூல். ‘நான் ஒரு புத்தர்’ என்னும் எண்ணம் உங்களுக்கு இருக்கட்டும். மேலும் இந்த ‘நான்’ என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ‘நான்’ மற்றும் புத்தநிலை ஆகிய இரண்டும் ஒன்றுசேர்ந்து இருக்க முடியாது. வெளிச்சம் உள்ளே வரும்போது இருட்டானது மறைவதுபோல, புத்தநிலை என்பது உங்களுக்கு வெளிப்படுத்தப்படும்போது ‘நான்’ என்பது மறைந்துவிடுகிறது (உள்ளிருக்கும் புத்தர்). மரணம் குறித்து தியானிக்க ஆரம்பி. மகிழ்ச்சியோடும், பிரார்த்தனையுடனும் மரணத்தை உன்னால் வரவேற்க முடிந்தால், நீ மாபெரும் சிகரத்தை அடைவாய். ஏனெனில் மரணம்தான் வாழ்வின் உச்சகட்டம். மரணம் என்பது நி கடவுளை நேசிப்பதாகவோ அல்லது கடவுள் உன்னை நேசிப்பதாகவோ இருக்கிறது(சரணாகதியே புரிதலாகும்). தியானம் என்பது எதையுமே அறிந்துகொள்ளாத ஒரு நிலை. கல்வி கேள்வி அறிவினால் கலக்கப்படாத தூய்மையான ஒரு வெளியாக தியானம் உள்ளது. கல்வி அறிவானது ‘நான்’ மற்றும் ‘அது’ என்பதை உருவாக்கி, இடைவெளியை ஏற்படுத்துகிறது. ஒரு குந்தையானது கல்வி, கேள்வி, அறிவு இல்லாமல் களங்கமின்மையுடன் இருக்கிறது. அதனால் குழந்தையின் நிலையில் இருங்கள் (கற்றறிவை மறுத்தல்) தியானம் கைகூடும்’ என்கிறார் ஓஷோ. இந்நூலில் சிந்தனையைத் தூண்டம் பல குட்டிக்கதைகள் உள்ளன. அவற்றுள் முத்தாய்ப்பாக ‘சந்நியாசம் இப்பொழுதே ஏன் வாங்க வேண்டும்’ என்பதற்குக் கூறப்பட்டுள்ள நகைச்சுவை கதை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து, ‘வாழ்க்கை விபத்து போன்று எதிர்பாராதது. நாளை நீ இல்லாமல் போகலாம். அடுத்த நொடி நீ இல்லாமல் போகலாம். அதனால் வாழ்வதற்கு இந்த நொடிப்பொழுது மட்டுமே உள்ளது’ என்பதை அறிவுறுத்தியாக்கை (உடல்) நிலையாமையை உணர்த்துகிறது. நன்றி: தினமணி, 28/12/2015.

Leave a Reply

Your email address will not be published.