இதழுலகில் திரு.வி.க.
இதழுலகில் திரு.வி.க., மா.ரா. இளங்கோவன், அமுதா, பக். 182, விலை 120ரூ.
தொழிலாளர்களே! கள்ளத் தலைவர்களே நம்பாதேயுங்கள்! காவி உடுத்தாத துறவி, துறவு பூணாத பிறவி, பட்டினத்தாரா? தாயுமானாரா? வள்ளலாரா? தமக்காக வாழாமல், பிறருக்காகவே தொண்டு செய்ய வாழ்ந்த புதுமைத் துறவி திரு.வி.க., புவி அறியா புதிய வரலாறு (பக். 14) என்ற அறிமுகத்துடன், தமிழ்த் தென்றல், தமிழ் முனிவர், சாது முதலியார்என, திரு.வி.க. அறிமுகம் செய்யப்படும் இந்த நூல், அவரது எழுத்து ஓவியங்களை நமக்கு விருந்து ஆக்குகின்றன. பேச்சிலும், எழுத்திலும், தமிழினம் தரம் சரிந்து வரும் இந்நாளில், திரு.வி.க. தன் எழுத்து நடையை மூன்றாகக் கூறியுள்ளது படிக்க வியப்பூட்டுகிறது. என் வாழ்க்கையில் மூவித நடைகள் மருவின. ஒன்று இளமையில் உற்றது. இன்னொன்று சங்க இலக்கியம் சார்ந்தது. மற்றொன்று பத்திரிகை உலகை அடைந்த நாளில் அமைந்தது. இந்த நடையே எனக்கு உரியதாய், உடையதாய் நிலைத்தது. இந்நடை எளியது, சிறுசிறு வாக்கியங்களால் ஆவது (பக். 23). திரு.வி.க. வின் தமிழ், தாலாட்டும் தென்றல் தமிழ், தேசபக்தன் பத்திரிகையில் எழுதி, திரு.வி.க. தமிழுக்குப் புத்துயிர் ஊட்டினார். தொழிலாளருக்கும் புரியும் வகையில் எளிமையாக, இனிமையாக எழுதினார். நவசக்தி இதழில் திரு,வி.க. தமிழ் மொழிப்பற்றை வளர்க்குமாறு வினாக்களை எழுப்பி எழுதினார். தமிழ்நாட்டின் வளம் எங்கே? நாகரிகம் எங்கே? அன்பெங்கே? தமிழ் நாடெங்கே? தமிழர்களே சிந்தியுங்கள்.(பக். 42). சென்னைத் தொழிலாளர் சங்கத்தை முதன்முதலில் துவக்கி, அவர்கள் முன்னேற்றத்திற்காக எழுதினார். தேவதாசிகளும் மனிதர்களே. அஃறிணை பிராணிகள் அல்லர் என்று அவர்களுக்காகவும் எழுதினார். தொழிலாளர்களே ஏமாறாதேயுங்கள். கள்ளத் தலைவர்களை நம்பாதேயுங்கள் என்று சாடியும் எழுதினார். தேசபக்தன், நவசக்தி இதழ்களில், திரு.வி.க., ஈரோடு ராமசாமி நாயக்கர், குடியரசு இதழுக்கு கடுமையாக பதில் கொடுத்தார். வயிற்றுப் பிழைப்பிற்காக ஆங்கிலம் கற்றுள்ளவர்கள், தமிழ்த் தாயை நசுக்க நினைத்தல் தகுமா? தமிழ் மாதா கண்ணீர் விட்டால், தேசத்திற்கு நலம் ஏற்படுமா? (பக்.79)என்று, தமிழுக்காகப் போராடுகிறார். திரு.வி.க.வின் வாழ்க்கை வரலாறும், தேசபக்தன், நவசக்தி இதழ்களின் தாக்கமும் ஆய்வுடன் தரப்பட்டுள்ளன. தேசபக்தன் தோன்றியிராவிட்டால் வகுப்புவாதம் கிளைத்து ஓங்கியிருக்கும். வகுப்புவாதக் கட்சியின் நச்சுப்பல், தேசபக்தனால் பிடுங்கப்பட்டு அதன் வேகம் ஒடுங்கியது (பக். 156). வகுப்பு வாதம், தேசபக்திக்கு எதிரான ஆதிக்கவாதம், நாத்திகவாதங்களை திரு.வி.க. எழுதுகோல் ஆயுதத்தால் வென்று வாகை சூடிய வரலாறு, இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. -முனைவர் மா.கி. இரமணன். நன்றி: தினமலர், 14/12/2014.