இயற்கை வேளாண்மைக் களஞ்சியம்
இயற்கை வேளாண்மைக் களஞ்சியம், ஆர்.எஸ். நாராயணன், யூனிக் மீடியா இண்டக்ரேட்டர், பக். 144, விலை 120ரூ.
இயற்கை விவசாய ஆராய்ச்சி விஞ்ஞானியான நூலாசிரியர், செயற்கை ரசாயன உரங்களால் நமது மண் மாசடைந்து, விவசாயம் செய்யவே தகுதியற்றதாக மாறிவிட்டதைக் கண்டு கொதித்து எழுபவர். அவருடைய இயற்கை விவசாயம் சார்ந்த தேடல்கள், அனுபவங்கள், தெளிவான கருத்துகளின் தொகுப்பே இந்நூல். பசுமைப் புரட்சிக்கு முன்பே நிலத்தில் ரசாயன உரங்களைப் போடும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது என்று நூலாசிரியர் எடுத்துக்காட்டுகளுடன் சொல்லியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நாம் மண்ணை நேசிப்பதனை மறந்து மண்ணை மாசுகளால் புண்ணாக்கிவிட்டோம். ரசாயனங்களைக் கொட்டி மலடாக்கிவிட்டோம். விஷ உணவை உற்பத்தி செய்து விஷத்தை உண்டு உடலும் மனமும் விஷமான மனிதனுக்கு வாழ்க்கைப் பார்வையும் போய் கருத்துக்குருடன் ஆகிவிட்டான் என்று கொதிக்கும் நூலாசிரியர், இன்று மனிதர்களுக்கு ஏற்படுகிற இதயநோய், சர்க்கரைநோய், சிறுநீரக நோய், புற்றுநோய் ஆகியவற்றுக்கு எல்லாம் காரணம் விஷமாக்கப்பட்ட மண்ணில் விளையும் உணவுகளை உட்கொள்வதே என்கிறார். இதற்கு மாற்று, இயற்கை விவசாயமே என்று கூறும் நூலாசிரியர், தனது சொந்த முயற்சியாக கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக, மாடித்தோட்டம் ஏற்படுத்தி, தக்காளி, வெண்டை, கத்தரி, கொத்தரி, முட்டைகோஸ், காலிஃப்ளவர், பாலக்கீரை, அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, மணத்தக்காளி ஆகியவற்றைப் பயிரிடுகிறார். அந்த அனுபவங்களும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் சிலரை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் சிலரை இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார். இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் சிறந்த நூல். நன்றி: தினமணி, 26/10/2015.