இரண்டு வரி காவியம்
இரண்டு வரி காவியம், திருக்குறள் தெளிவுரை, பட்டுக்கோட்டை பிரபாகர், ரம்யா பிரியா கிரியேஷன்ஸ் வெளியீடு, விலை 150ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-228-4.html நறுக்கென்று ஒரு திருக்குறள் உரை திருக்குறளுக்குப் பரிமேலழகர் போன்ற ஜாம்பவான்கள் முதல், சென்ற நூற்றாண்டின் டாக்டர் மு.வ. வழி ஆயிரக்கணக்கில் உரை எழுதியிருக்கிறார்கள். இப்போது கதாசிரியர், நாவலாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் நடைமுறைத் தமிழில் சரளமாக எழுதியுள்ள உரை விளக்கம் முற்றிலும் வித்தியாசமானது. ஒவ்வொரு அதிகாரத்தின் கடைசியிலும் நறுக்கென்று இரண்டே சொற்களில் மையக் கருத்தைச் சொல்லியுள்ள பாங்கு இதற்குமுன் வேறு யாரும் கையாண்டதாகத் தெரியவில்லை. அதிகாரங்களின் இறுதியில் தரப்பட்டுள்ள தொகுப்புரையும், சுருக்கமும் மிகவும் பயனுள்ள முயற்சி. அமைச்சு அதிகாரத்துக்குத் தரப்பட்டுள்ள சுருக்கம் இது. அறிவும் திறமையும் கொண்ட அமைச்சர் ஒரு தலைவருக்குக் கிடைக்கவில்லை என்றால் நல்ல காரியங்கள் செய்யமுடியாது. பட்டுக்கோட்டை பிரபாகரா? என்று புருவம் உயர்த்த வேண்டியதில்லை. புனைகதைகள், மர்மங்கள் எல்லாவற்றையும் சற்றே மறந்துவிட்டு தேர்ந்த இலக்கியவாதியாகவும் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார். இத்தனை காலமாய் முழுமையாகப் படிக்காமல் விட்டிருந்தோமே என்ற குற்ற உணர்வும், இப்போதாவது படித்தோமே என்கிற மனநிறைவும் தமக்கு ஏற்பட்டதாக முன்னுரையில் எழுதுகிறார் பிரபாகர். பலருடைய நிஜரூபம் அதுதான். திருக்குறளையும், பாரதியையும்கூடச் சரியாகப் படிக்காமலேயே கதையளக்கிறவர்களின் சதவிகிதம் தமிழர்களில் மிக அதிகம். இந்த நூல் பெருவாரியான வாசகர்களை வள்ளுவரின் சந்நிதிக்கு அருகே கொண்டு செல்லும் என்று நிச்சயம் நம்பலாம். -சுப்ர.பாலன். நன்றி: கல்கி, 3/5/2014.