உருள் பெருந்தேர்
உருள் பெருந்தேர், கலாப்ரியா, விகடன் பிரசுரம், பக். 262, விலை 130ரூ.
படைப்பாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை வாசிப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை நாமும் உணர்வது நமக்கு புது அனுபவத்தைக் கொடுக்கிறது. நூலாசிரியர் கலாப்ரியா தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களையும் சுவாரஸ்யங்களையும் மிகவும் ஆழமாகவும் எளிமையாகவும் எடுத்துரைத்திருக்கிறார். தனது இளமைப் பருவத்தை வாசகர்களின் நெஞ்சில் பதிய வைத்துச் செல்லும் வரிகள் ஏராளம். தன் பதின் பருவத்தைச் சொல்லிச் செல்லும்போதுதான் வாழ்க்கை முறை குறித்தும், சமூகத்தின் வரலாறு குறித்தும் அழகாக எடுத்துரைத்துள்ளார். கலாப்ரியாவின் இந்த உருள் பெருந்தேர் நூல் ஒரு நினைவுப் பெட்டகம். அந்தக் காலத்தில் கலை அனுபவத்துக்காகவும், இசைக்காவும் ஏங்கிய இளைஞர்களின் மனதை முழுமையாகப் பிரதிபலித்துள்ளார். ஒரு பாட்டைக் கேட்பதற்காக திரையரங்குகளின் வாசல்களிலும், பொருள்காட்சிகளிலும் காத்துக் கிடந்த தினங்களைப் பற்றிய குறிப்புகள், இதைப் படிப்பவர்களையும் அவர்களது பதின் பருவத்துக்கே அழைத்துச் செல்லும். மனநிறைவைத் தரும் நூல். நன்றி: தினமணி, 14/3/2016.