எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு, தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 288, விலை 180ரூ.

பொதுவுடைமை இயக்கத் தலைவர் நல்லகண்ணுவின் உயர்ந்த பண்புகளையும் ஆளுமைத் திறனையும், போராட்ட வாழ்க்கையையும் எல்லாரும் அறிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்டிருக்கும் நூல். அவருடன் பழகியவர்கள், போராட்டங்களில் பங்கேற்றவர்கள், சிறையில் உடனிருந்தவர்கள், அவரைப் பற்றி எழுதிய கட்டுரைகள், கவிதைகள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. நல்ல கண்ணுவின் துணைவியார் ரஞ்சிதம் நல்லகண்ணுவுடனான நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது. பொது வாழ்க்கையில் மட்டுமின்றி, தனி வாழ்க்கையிலும் எவ்வாறு ஒரு புரட்சிகரமான தோழராகவே நல்லகண்ணு வாழ்ந்து வருகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. விசாயத் தொழிலாளர்களுக்கு கூலியாக நெல்லைக் கொடுக்கும்போது, நிலச் சொந்தக்காரர்கள் குறைந்த அளவுள்ள மரக்காலில் அளந்ததை எதிர்த்து அவர் முத்திரை மரக்கால் போராட்டம் நடத்தியது, 1948 இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது தலைமறைவாக இருந்த அவரைக் கைது செய்த காவல்துறையினர் அவருடைய மீசையை சிகரெட் நெருப்பால் கொளுத்தி துன்புறுத்தியது, தாமிரபரணி நதியில் கலக்கும் கடனா நதியில் அணைக்ட்டக்கோரி அவன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது என அவருடைய போராட்ட வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கு உத்வேகம் ஊட்டக் கூடியதாக அமைந்திருக்கிறது. நல்லகண்ணு எழுதிய சில கட்டுரைகள் நூலின் இறுதியில் இடம் பெற்றிருப்பது சிறப்பு. நன்றி: தினமணி, 13/4/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *