எழில் மரம்
எழில் மரம், ஜேம்ஸ் டூலி, தமிழில் லியோ ஜோசப், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, பக். 414, விலை 360ரூ.
இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் கல்வி தனியார்மயமாகி வரும் வேளையில் அதை நியாயப்படுத்தும் விதமாக வெளிவந்திருக்கும் நூல். உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகளைப் பற்றிய ஆய்வை மேற்கொண்ட நூலாசிரியர், ஏழைக் குழந்தைகளுக்கு குறைந்த கட்டணத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் சிறப்பான கல்வியைக் கற்றுத் தருகின்றன என்கிறார். ஏழை மக்கள் தங்களுடைய முன்னேற்றத்துக்கு அரசாங்கத்தைச் சாந்திராமல், சுய உதவியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். சுய உதவிப் பணத்தையும், சுய உதவி வேலைகளையும் மாற்று வழியாகக் கொண்டு அரசாங்க உதவிகளைத் தவிர்த்து வருகிறார்கள் என்கிறார். ஏழைகளுக்காகச் செயல்படும் தனியார் பள்ளிகள் பற்றி, விமர்சகர்கள் என்னதான் கண்டனம் செய்தாலும், அதன் உரிமையாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் மட்டுமே அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு மிகவும் உகந்த தேவைகள் எதுவோ அதைச் செய்து வருகிறார்கள் என்கிறார் நூலாசிரியர். நூலாசிரியரின் இவை போன்ற கருத்துகள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பதை நடைமுறை வாழ்க்கை அனுபவங்களே நமக்குச் சொல்லிவிடுகின்றன. ஆண்டுதோறும் தனியார் கல்வி நிறுவனங்கள் கல்விக் கட்டணத்தை அதிகப்படுத்துவதாலும், அவை வசூலிக்கும் அதிகமான நன்கொடையாலும் ஏழை மக்கள் மட்டுமல்ல, நடுத்தர மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தங்களுடைய குழந்தைகளுக்கு நல்ல கல்வியைத் தர முடியாமல் விழி பிதுங்கிக் கிடப்பது நூலாசிரியரின் ஆய்வுக் கண்களில் படாமல் போனது ஏன்? என்று தெரியவில்லை. நன்றி: தினமணி, 22/6/2015.