ஒரு தலித்திடமிருந்து

ஒரு தலித்திடமிருந்து, வசந்த் மூன், தமிழில் வெ. கோவிந்தசாமி, நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 285, விலை 220ரூ.

  To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-287-0.html தலித் சமூக உட்பிரிவு பகைமையை அம்பேத்கர் இயக்கம் எதிர்கொண்டது எப்படி? டாக்டர் அம்பேத்கரின் வரலாற்றை ஆதாரத்தோடும் சுவையாகவும் எழுதியவர் வசந்த் மூன். மகாராஷ்டிர அரசால் வெளியிடப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் நூல்களுக்கு தொகுப்பாசிரியராக இருந்து அம்பேத்கரின் எழுத்துக்களை, பேச்சுக்களை மக்கள் முன் வைத்தவர். அம்பேத்கரின் தொண்டர் படை அமைப்பில் சேர்ந்து கடைசி வரை தொண்டாற்றியவர். அவர், தன் வாழ்க்கை வரலாற்றை மராட்டி மொழியில் எழுதி உள்ளார். அதன் ஆங்கில பதிப்பில் இருந்து இந்த நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வட்டாட்சியராக பதவியில் இருந்த வசந்த் மூனின் இளமைக்காலம் மிகவும் சோகமானது. சாப்பாட்டிற்கு வழியில்லாமல் மூன், ஒருமுறை பிச்சைக்கூட எடுத்திருக்கிறார். வறுமையும் போராட்டமுமே அவருக்கு வாழ்க்கை. அதையும் மீறி அவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார். தன்னைப் பற்றி எழுதுவதே சுயசரிதை. ஆனால் வசந்த் மூன், இந்த நூலில், பல தலித் தலைவர்களின் பணிகளை பல இடங்களில் பதிவு செய்துள்ளார். மகாராஷ்டிராவில், தலித் சமூகங்களுக்கு உள்ளே பல உட்பிரிவு ஜாதி பகைமை இருந்தது. அதை, அம்பேத்கர் இயக்கம் எப்படி எதிர்கொண்டது என்பதை, வசந்த் மூன் தெளிவுபடுத்தியுள்ளார். அன்றைய காலகட்டத்தில், தலித் சமூக உட்பிரிவுகளுக்கு உள்ளேயே கூட, திருமணம் நடைபெற்றதில்லை. அம்பேத்கரின் சமத்துவ தொண்டர்படை, உள்ஜாதி பகைமை பாராட்டக்கூடாது என்ற விதியோடு செயல்பட்டு வந்தது. வசந்த் மூன், வேறு ஒரு சமூகத்தில் இருந்து தன் மனைவியை தேர்ந்தெடுத்து, அம்பேத்கரின் கொள்கையை நிலைநாட்டினர். வசந்த் மூன் வாழ்க்கை வரலாற்றில், அம்பேத்கரின் சமத்துவ தொண்டர் படை பற்றிய செய்திகளே பாதிக்கு பாதி பதிவு செய்யப்பட்டுள்ளன. சிவப்பு நிற சட்டையும், காக்கி நிற கால் சட்டையும் அந்த அமைப்பினருக்கு சீருடை. பள்ளிக் கட்டணம் இல்லாமல் பாதியிலேயே படிப்பை விட்ட தலித் மாணவர்களை, பணம் வசூலித்து படிக்க வைத்தது முதல், சந்தையில் தலித் பெண்களுக்கு குண்டர்களால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பது வரை, சமத்துவ தொண்டர் படை ஆற்றிய பல்வேறு பணிகளை, இந்த நூல் மூலம் அறியலாம். அம்பேத்கர் மதம் மாறப்போவதாக (1935) அறிவித்தாலும்கூட, உடனடியாக, மக்கள் யாரும் மதம் மாறவில்லை. மகர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவர் என்பது பலரின் கருத்தாக இருந்தது. மகர்கள், முஸ்லிம்களின் விழாக்களில் பங்குகொண்ட போதிலும், யாரும் இஸ்லாமியராக மாறிவிடவில்லை என்று, மூன் குறிப்பிடுகிறார். கடைசிவரை அம்பேத்கரின் கருத்தும் முடிவும் அதுவாகத்தான் இருந்தது. இந்த காலகட்டத்தில், ஜாதியை ஒழிப்பதற்காக, தலித் அல்லாதவர்கள் எப்படி போராடியுள்ளனர் என்பதை குறிப்பிட்டுள்ளார். -ம.வெ. நன்றி: தினமலர், 8/2/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *