ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி
ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி, பி. வெங்கட்ராமன், மணிவாசகர் நூலகம், சென்னை, பக். 176, விலை 100ரூ.
அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு இதழியல் கோட்டையாக விளங்கிய புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்தாலும் அச்சக அதிபர் ஒருவருக்கு மகனாகப் பிறந்ததாலும் இந்நூலாசிரியருக்கு பத்திரிகைத் துறையில் சிறுவயது முதலே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தனது வாழ்வின் சில முக்கிய அனுபவங்கள் குறித்தும், தான் சந்தித்த சில பிரமுகர்கள் குறித்தும் கட்டுரையாகவும், துணுக்காகவும், கவிதையாகவும் சில இதழ்களிலும், சில சிறப்பு மலர்களிலும் அவர் எழுதியிருப்பதன் தொகுப்பு இந்நூல். ஆழமான விஷயங்கள் எதுவுமில்லாததாலும், எல்லா வாசகர்களுக்குமான பொதுமைத்தன்மை பெரும்பாலான தகவல்களில் இல்லாததாலும் வாசிக்கும்போது அயர்ச்சி ஏற்படுகிறது. ஆயினம் ஒரு சில தகவல்கள் நம்மை வியப்பிலாழ்த்துவதையும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக எழுத்தாளர் அகிலன் சிறுவர்களுக்காக எழுதிய ஒரு குறுநாவல் புத்தகமாக வெளிவந்த பின்னர், கல்கி இதழில் தொடராக வெளிவந்தது. பத்திரிகைகள் சிறுகதைப்போட்டி மட்டுமே நடத்தி வந்த காலத்தில், குழந்தை எழுத்தாளரான ஆர்.வி. தொடர்கதைப்போட்டி நடத்தியது, கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் நாடக வரலாறு குறித்து மன்று நாள்கள் தொடர்ந்து செற்பொழிவாற்றியது. திரைப்பட இசையமைப்பாளர் ஜி. ராமநாதன் மீது பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் வைத்திருந்த அபரிமிதமான மரியாதை (என் இதயத்தைப் திறந்து காட்டினால் அங்கு ராமநாதய்யர்தான் இருப்பார்) இப்படிப் பல செய்திகள். தமிழில் சிறுவர் இதழ்கள் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை, தமிழில் வெளிவந்திருக்கும் சிறுவர் இதழ்கள் பற்றியும் குழந்தை எழுத்தாளர்கள் பற்றியும் அரிய உதவும் ஓர் ஆவணமாகும். நன்றி: தினமணி, 20/10/2014.