ஒலிக்காத இளவேனில்
ஒலிக்காத இளவேனில், தொகுப்பு : தான்யா, பிரதீபா கனகா – தில்லைநாதன், வெளியீடு: வடலி, 10வது குறுக்குத் தெரு, ட்ரஸ்ட்புரம் ரோடு, கோடம்பாக்கம், சென்னை – 600024. விலை ரூ. 135/-
ஈழத்து இலக்கியம் பல்வேறு குரல்களோடும் முகங்களோடும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் இன்னொரு முக்கியமான தொகுப்பு ‘ஒலிக்காத இளவேனில்’. புலம்பெயர்ந்த இலங்கைப் பெண்கள் எழுதிய கவிதைகள் என்ற பொது அடையாளத்தின்கீழ் தொகுக்கப்பட்டுள்ள இந்தக் கவிதைகள், தமிழில் பெண் கவிதை மொழிக்குப் புதிய சாரத்தை வழங்குகின்றன. ஈழத்துப் பெண்கள் ஆணாதிக்க சமூகத்தின் வரலாற்றுத் துயரத்துடன் இனவாத வன்முறை, யுத்தம் என சமகாலத் துயரத்தையும் சேர்த்து எதிர்கொண்டார்கள். கொடுமைகளின் ரத்த சாட்சியங்களாய் இந்தக் கவிதைகள் விரிகின்றன. ஜெபா என்ற கவிஞர் எழுதுகிறார்… திணிக்கப்பட்ட காலை திணிக்கப்பட்ட எழுத்து திணிக்கப்பட்ட ரசனை திணிக்கப்பட்ட குறி. இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு புள்ளியிலும் தங்கள் மேல் திணிக்கப்படும் பலவந்தங்களைப் பரிசீலிக்கும் இந்தக் கவிதைகள் ஒரு பரந்துபட்ட வாசிப்பைக் கோரி நிற்கின்றன. நன்றி: குங்குமம் 19-11-12