கண் தெரியாத இசைஞன்
கண் தெரியாத இசைஞன், விளாதீமிர் கொரலேன்கோ, தமிழில் ரா.கிருஷ்னையா, விகடன் பிரசுரம், சென்னை, பக். 237, விலை 115ரூ.
ரஷ்ய எழுத்தாளர் விளாதீமிர் கொரலேன்கோ எழுதிய புகழ்பெற்ற கதைகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது கண் தெரியாத இசைஞன். இந்தக் கதை 13 ஆண்டுகளாகச் சிந்தித்து ஓராண்டில் எழுதி முடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பார்வையற்ற நபர்களிடம் ஒளியைத் தேடும் வேட்டை இருப்பதையே இந்தக் கதை வலியுறுத்துகிறத. இது ஒரு கற்பனைக் கதை போலத் தோன்றினாலும், தாம் சந்தித்த பார்வையற்ற நபர்களில் திறமைசாலிகளை முன் வைத்தே இக்கதையை மெருகேற்றியதாக கொரலேன்கோ கூறுகிறார். மனிதனுடைய மகிழ்ச்சியும், அதனை அடைவதற்கான வழிகளும் இந்தக் கதையில் அலசப்படுகின்றன. இக்கதையின் நாயகனான கண் தெரியாத இளைஞனுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய தாய், காதலி, மாமா ஆகியோர் கிடைத்தது அவனது அதிர்ஷ்டம். அன்பைப் பொழியும் ஆற்றலைக் கொண்ட இந்தக் கதை, மனித சமுதாயத்தின் உயர்ந்த தன்மையை உணர்த்தக் கூடியது. படிக்கும்போது கதைக் களம், இயற்கை அழகு, வர்ணிப்பு, அன்பு, காதல், பிரிவு, சாதனை என அனைத்திலும் பல்வேறு பரிமாணங்களில் இந்த ரஷிய இலக்கியம் மிளிர்வதை நம்மால் உணர முடியும். நன்றி: தினமணி, 6/1/2015