கனடா நாட்குறிப்பு

கனடா நாட்குறிப்பு, சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 110ரூ.

கனடாவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அந்நாட்டில் பிறக்காதவர்கள். அதாவது, 120 நாட்டு மக்கள், பிறந்த நாட்டைவிட்டு, இங்கு வந்து குடியேறியவர்கள் என்கிறார் நூலாசிரியர் சா. கந்தசாமி. இது வழக்கமான பயணக்கட்டுரை அல்ல. தகவல்கள், வரலாறுகளின் குவியல் இந்நூல். உதாரணத்திற்கு விமானத்தில் சிற்றுண்டியாக வறுத்த வேர்க்கடலையைத் தருகிறார்கள். உடனே நூலாசிரியரின் நினைவு வேர்க்கடலையின் தாயகமான மணிலாவுக்குப் போய்விடுகிறது. மணிலாவிலிருந்துதான் இந்த ‘peanut’  இன்று உலகம் முழுவதும் பரவி விளைவிக்கப்பட்டு, பணப்பயிராக மாறியிருப்பதன் வரலாற்றைக் கூறுகிறார். ஆக, புலம்பெயர்தல் என்பது மனிதருக்கு மட்டுமல்ல. அது தானியங்கள், தாவரங்கள், விலங்கினங்கள், பறவையினங்களுக்குமானது என்கிறார். அதுபோல காப்பி பிரேசில் நாட்டினுடையது. அது பிரெஞ்சு நாட்டு வழியாகப் பரவியது என்கிறார். இதுதவிர, ஏராளமான தகவல்கள், முக்கியமாக கனடாவின் பூர்வகுடிகள், பல்வேறு குடிகள், பல்வேறு நாடுகளிலிருந்து கனடாவில் இடம்பிடித்த வரலாறு, இங்கிலாந்துடனான யுத்தம், பல்வேறு நாட்டுக் கலாசாரம் கனடாக் கலாசாரமாக உருவெடுத்த அதிசயம், அமெரிக்க ஐரோப்பிய வரலாறுகள், அச்சுக்கலை வரலாறு, செவ்விந்தியர் வரலாறு, வீட்டு வாசலில் ‘டோட்டம்’ என்று சொல்லப்படும் கதை சொல்லும் சிற்பங்கள் கொண்ட நெடுமரங்கள் நடுவது, சர்ரே என்னும் பகுதியில் வாரம் ஒருநாள் இரண்டு மணி நேரம் நடத்தப்படும் தமிழ் வகுப்பு, சலாமின் மீன், கனடாவின் செல்வம் கொழிக்கும் மர ஏற்றுமதித் தொழில் இப்படிப் பல அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ள சுவையான நூல். நன்றி: தினமணி, 5/10/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *