லட்சுமி என்ற பயணி
லட்சுமி என்ற பயணி, தொழிற்சங்கவாதி லட்சுமி, மைத்ரி பதிப்பகம்.
சிறை சென்று ஓய்வெடுக்க வேண்டும் தொழிற்சங்கவாதி லட்சுமி எழுதிய ‘லட்சுமி என்ற பயணி’ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். மைத்ரி பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. திருச்சியில் உள்ள ‘டேன்டெக்ஸ்’ பனியன் நிறுவன தொழிலாளி, லட்சுமி. அறுபது வயதாகும் அவர், எமர்ஜென்சி காலத்தில் இடதுசாரி தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ.வில் இருந்தார். அவரது கணவர் மணியரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டார செயலராக பணியாற்றியவர். வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் லட்சுமிக்கு. கணவர் அரசியலில் இருப்பதால், அவரால் குடும்பத்தை கவனிக்க முடியாது. மகன், மகள் இருவரில், மகள் சிறுவயதிலேயே இறந்துவிடுகிறாள். இந்த சோகத்தை தாங்கிக்கொண்டு, மகனை ஆளாக்குகிறார் லட்சுமி. அவனுக்கு லெனின் கதைகளை சொல்லி வளர்க்கிறார். அவனோ, லெனின் உயிரோடு இருப்பதாக நம்புகிறான். வேலை, தொழிற்சங்கம், குடும்ப பராமரிப்பு என சுழன்று கொண்டிருந்தாலும், போராட்டங்களில் பங்கேற்பதில், லட்சுமி முன்னிலையில் இருப்பார். போராட்டங்களின் போது, கைது செய்யப்படுவோம் என, எதிர்பார்த்து மாற்றுத் துணியை பையில்போட்டு எடுத்துச் செல்வார். ஆனால், பெண் என்பதால், அவரை போலீசார் கைது செய்யாமல் விட்டுவிடுவர். கடைசி வரை, கைதாகி சிறை செல்லும் வாய்ப்பு லட்சுமிக்கு கிடைக்கவில்லை. இதுபற்றி லட்சுமி கூறுகையில், ‘சிறைக்கு சென்றால், வேலை, தொழிற்சங்கம், குடும்ப பராமரிப்பு ஆகியவற்றிலிருந்து கில நாட்கள் ஓய்வு கிடைக்கும் என்ற ஆசையில், சிறைக்கு செல்ல விரும்பினேன். ஆனால், அந்த ஓய்வு எனக்கு கிடைக்கவே இல்லை’ என்பார். ‘லட்சுமி என்ற பயணி’ தன்னுடைய வாழ்வியல் துயரங்களைக்கூட, பல நேரங்களில் சாதாரண வாழ்வியல் போக்காக கருதும் மனம் கொண்டவள் என்பது நெஞ்சை உருகவைக்கிறது. இந்த நூலை தன் சுயசரிதையாக அவர் எழுதியுள்ளார். சாதாரண பெண் தொண்டரின் இந்த பதிவு முக்கியமானது. -ரேவதி(எழுத்தாளர்). நன்றி: தினமலர்,18/10/15.