கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, திருத்திய முதல் பதிப்பு மே 2014, தமிழாக்கம் எஸ். வி. ராஜதுரை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 550ரூ.

மனித விடுதலைக்கான வழி சொல்லும் அறிக்கை மனித விடுதலைக்குத் தேவை வெறும் அரசியல் மாற்றமல்ல. ஒட்டு மொத்தமான சமுதாய மாற்றமே என்பதை 1848ம் ஆண்டிலேயே உலகுக்கு அறிவித்த அரசியல், தத்துவ, பொருளாதார, பண்பாட்டு ஆவணம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. இந்த அறிக்கையின் முதல் பிரிவின் தமிழாக்கம் தமிழில் 1931ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஈ.வே.ரா.வின் சுயமரியாதை இயக்க வார இதழான குடி அரசில் ஐந்து வாரங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. அறிக்கையின் முழுமையான முதல் தமிழாக்கத்தை எம்.இஸ்மத் பாஷா மேற்கொண்டிருந்தார். இதை ஜனசக்தி பத்திரிகை 1948ல் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து வேறு சில மொழிபெயர்ப்புகளும் தமிழில் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை, ஏறக்குறைய 25 ஆண்டுகள் மனித உரிமை இயக்கத்தில் களப்பணியாற்றிய எஸ்.வி. ராஜதுரை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலை வாசிக்க முற்படும் தோழருக்குத் தோதாக அறிமுக உரையையும், விளக்கக் குறிப்புகளையும், மொழிபெயர்ப்பில் ஈடுபட்டதன் பின்னணி, மொழிபெயர்ப்பு விவரங்கள் போன்றவற்றையும் விரிவாக எஸ்.வி. ராஜதுரை எழுதியுள்ளார். வெறுமனே இந்த அறிக்கையைப் படித்தால் மட்டுமே உலகம் மாறிவிடாது. ஆனால் இதை வாசிக்கும்போது உலகத்தை மாற்றிவிட வேண்டும் என்னும் எண்ணம் தோன்றுவது திண்ணம். -ரிஷி. நன்றி: தி இந்து, 9/8/2014.  

—-

 

அழகு ஆரோக்கியம் ஆயுள், புதிய வாழ்வில் பதிப்பகம், சென்னை, விலை 140ரூ.

உடல் மற்றும் மன நலத்தைப் பேணும் வழிகள் குறித்த கட்டுரைகள் அடங்கிய நூல் இது. கூந்தல் தொடங்கி கால்நகம் வரை, மன அழுத்தத்திலிருந்து விடுபட எளிய வழிகள் என சமூகத்துக்குத் தேவையானவை குறித்து விளக்குகிறது நூல். குழந்தைகளை அணுகுவது குறித்தும் அவர்களின் மனநலம் குறித்தும் அலசுகிறது. நன்றி: இந்தியா டுடே, 25/6/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *