கரமசோவ் சகோதரர்கள்
கரமசோவ் சகோதரர்கள், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, தமிழில்: கவிஞர் புவியரசு, நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 98. இரண்டு தொகுப்புகள் விலை ரூ. 1300 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-270-1.html
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவல், உலகப் புகழ் பெற்றது. அந்த அற்புதமான நாவலை கவிஞர் புவியரசு நல்ல தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்தத் தமிழ்ப் பணிக்காக அவர் பாராட்டுக்குரியவர். கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய மூன்றுக்கும் மொழிபெயர்ப்புக்கான தன்மை மாறுபடுகின்றன. மொழிபெயர்ப்பாளரின் பணிச்சுமையும் மாறுபடுகின்றது. நாவல் அல்லது கதையைப் பொருத்தவரையில், உணர்ச்சியின் தன்மைக்கேற்ப, மூலத்தின் வீச்சுக்கேற்ப, ஒரு மொழிபெயர்ப்பாளன் சில விலகல்களை, மொழிநடையைச் செய்துகொள்வது தவிர்க்க முடியாதது. ஆனால் அது சொற்றொடர் விட்டுப்போவதாக, பதிவு விடுபடலாக, கருத்து மாறுபாடாக, சொல்லின் பொருள் காலம் கடந்ததாக அமைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலுக்கு ஆங்கிலத்தில், பல மொழி பெயர்ப்புகள் வந்துள்ளன. கவிஞர் புவியரசு எடுத்துக்கொண்ட மொழிபெயர்ப்பு எது என்பதை 48 பக்க முன்னுரையில் குறிப்பிட்டிருக்கலாம். மொழிபெயர்ப்பில் சில நெருடல்கள் இருப்பினும் அவை, பெரிய குறைகள் அல்ல. இதனால் நாவலின் அழகோ, புகழோ அதன் தன்மையோ பங்கப்பட்டுவிடவில்லை. தமிழில் படிப்பவர் இந்த நாவலின் முழுமையைக் குறைவில்லாமல் உணர்ந்துகொள்ள எந்தத் தடையும் இல்லை. இருப்பினும்கூட, தமிழ்ப் பதிப்புலகில் காபி எடிட்டர் என்ற ஒரு பதவி இல்லாததால் சில குறைபாடுகள் எல்லா மொழிபெயர்ப்புகளிலும் காணப்படுகின்றன என்பதே இதைச் சொல்ல காரணம்.
—
போட்டித் தேர்வுகளில் நுழைவது எப்படி?, ஸ்ரீநிவாஸ் பிரபு, பக். 312, விகடன் பிரசுரம், சென்னை – 2. விலை ரூ. 125 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-861-3.html
மத்திய மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகள் எழுதும்போது வினாக்களை விரைவில் புரிந்துகொண்டு எவ்வாறு சரியாக விடையளிப்பது, எங்கே தவறு ஏற்படும், நேரக் கட்டுப்பாடு, தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது, துறைரீதியான தேர்வுகளுக்கு எப்படித் தயார் செய்து என்பன போன்ற நுணுக்கமான விவரங்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. கேள்விகளுக்கு நாம் விடையளிப்பது முக்கியமல்ல; நுண்ணறிவைப் பயன்படுத்தி எவ்வளவு விரைவில் பதில் அளித்து நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்பதே முக்கியம் என்பதை நூல் சுட்டிக்காட்டுகிறது. ரயில்வே தேர்வுகள், வங்கித் தேர்வுகளின் வினாத்தாள்கள் ஆங்கிலத்துடன் பிராந்திய மொழிகளிலும் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு வினாத்தாள்கள் இருந்தால் நேரம் விரயமாவதைத் தவிர்க்க முடியும் என்பதை இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரிக் கேள்விகள் நமக்கு உணர்த்துகின்றன. போட்டித் தேர்வுக்கு மட்டும்தான் என்றில்லாமல், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் வளாகத் தேர்வுக்கும் இப்புத்தகம் பயன்படும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினமணி 10-12-12