கற்க கசடற விற்க அதற்குத் தக

கற்க கசடற விற்க அதற்குத் தக, பாரதி தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 248, விலை 120ரூ.

இன்றைய நவீன உலகம் கல்வியை, மிகப் பெரிய வியாபாரப் பொருளாக்கியிருப்பதை அம்பலப்படுத்தும் நூல். நான்காம் வகுப்பு மாணவனுக்கு டேப்லேட் கணினி, ப்ராஜெக்ட் செய்ய ரூ. 10 ஆயிரம் செலவு, மேஜை – நாற்காலியை உடைத்துவிடாமலிருக்க ரூ. 30 ஆயிரம் பிணையத்தொகை, அரசு கட்டணத்தை அலட்சியப்படுத்தி அதைவிட 4 மடங்கு கூடுதல் கட்டணம், தெருமுனை மட்டுமே வந்து செல்லும் பள்ளிப் பேருந்துக்கு ரூ.16 ஆயிரம் என வட்டிக் கடை போன்று பணத்தைச் சுரண்டும் கல்வி நிறுவனங்கள், கடைசியில் அரசு அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு வருவதை அறிந்தாலும் பெற்றோரின் மோகம் மட்டும் குறையாமலிருப்பது வியப்பளிக்கிறது. அதிக மதிப்பெண் எடுத்து பிற மாணவர்களை முந்திச் செல்வதில்தான் முன்னேற்றம் இருப்பதாக நம்ப வைக்கும் இன்றைய தனியார் கல்விக் கூடங்கள், மக்களுக்குத் தரமான, இலவசக் கல்வி அளிக்கும் பொறுப்பில் இருந்து நழுவிச் செல்லும் அரசுகள், அரசின் கல்வி நிலையங்கள், கல்வியைத் தனியார் மயமாக்க தொலைநோக்குத் திட்டங்கள், அடிப்படை வசதிகளற்ற அரசுப் பள்ளிகளைக் கண்டுகொள்ள மறுக்கும் அரசுஅதிகாரிகள் என, எதிர்காலத்தின் மீதான அச்ச உணர்வை ஏற்படுத்தும் தகவல்கள் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளன. சாதனை புரிந்து வரும் அரசுப் பள்ளிகளையும் அடையாளம் காட்டுகிறார் நூலாசிரியர். தமிழகத்தின் இன்றையக் கல்வி, சமூக நிலையைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு மிகச் சிறந்த ஆவணமாகத் திகழ்கிறது இந்த நூல். நன்றி: தினமணி, 6/7/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *