கழிப்பறைக்கு சென்றிருக்கிறார் கடவுள்
கழிப்பறைக்கு சென்றிருக்கிறார் கடவுள், மு. முருகேஷ், அகநி பதிப்பகம், பக். 104, விலை 50ரூ.
போதையும் இல்லை. போதனைகளும் இல்லை. தமிழ் எழுத்துலகில், இடதுசாரி இலக்கிய கருத்தியல், பரவலானபோது, அறியப்பட்டவர், கவிஞர் மு. முருகேஷ். கடந்த 1990களுக்குப் பின், ஹைக்கூ கவிதைகள், தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதிலும் தனித்து அடையாளம் காணப்பட்டார். இவரின், பத்தாவது கவிதை தொகுதி, கழிப்பறைக்கு சென்றிருக்கிறார் கடவுள். கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்ற இடதுசாரி கருத்தியலை, கவிஞர் உள்வாங்கி இருப்பதால், வாசகனை மிரட்டாத வகையில், அவரது கவிதைகள், நம் தோள் மேல் கைபோடும் நண்பர்களைப் போல பேசுகின்றன. இதில் விவரிக்கும் அனுபவங்களும், எளிய மனிதர்களின் வாழ்வையே படம் பிடித்துக் காட்டுகின்றன. அதனால், தேனீரை பருகிக் கொண்டே இலக்கியம் பேசும் தோழியைப் போல், எந்த உறுத்தலுமின்றி இவருடைய கவிதைகளை வாசிக்கலாம். இதில், போதையும் இல்லை. போதனைகளும் இல்லை. வாக்குறுதிகளும் இல்லை. விசாரணையும் இல்லை. ஓடும் நதியில், ஒரு கூடைப் பூவை, ஒரே நேரத்தில் கொட்டியதைப்போல் அழகாக நகர்கிறது. எளிமையான, அதே நேரத்தில் தேர்ந்த மொழிநடை. பல இடங்களில் வார்த்தைகளை பிரயோகிக்கும் முறை, இவருக்கு லகுவாக கைகூடியுள்ளது. காட்சிகளை விவரிக்கும் விதமும் அப்படியே அமைந்துள்ளது. சட்டென விழும் திடீர் மழையை போல், எதிர்பாராத இடங்களில் எல்லாம் திகைப்பூட்டுகிறார். நீருறவு, மறுவருகை, உயிர்த்திருத்தல், அகம் புறம், கல்வியில் சிறந்த, வண்ணச்சிறகு, கழிப்பறைக்கு சென்றிருக்கிறார் கடவுள், தழும்புதல் போன்ற தலைப்பிலான கவிதைகள், கவனிக்கத் தக்க வைகயில் அமைந்துள்ளன. அதிலும் குறிப்பாக, நெடுங்கவிதை என, நீட்டி முழங்காமல், சிறு சிறு வார்த்தைகளில், பெருங்கவிதை செய்திருக்கிறார். யதார்த்தங்களை விவரிப்பதில், ஆச்சரியம் கொள்ள வைக்கிறார். கதறியழும் சாவு வீடுகளுக்கு செல்கையிலும் வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் கன்னம் கிள்ளிக் கொஞ்சி விட்டுத்தான் உள்நுழைகிறார்கள் பெண்கள் என்ற கவிதை, வாழ்வின் அழகிய முரண்களை எடுத்தச் சொல்கிறது. போர்வை போர்த்திய கருப்புக் கடவுளை மிக நுட்பமாக வரைந்துள்ளார், ஓவியர் டிராட்ஸ்கி மருது. கருப்பு பக்தன் வணங்கும் கடவுளும், கறுப்பாகத் தானே இருக்க முடியும். -அ.ப. இராசா. நன்றி: தினமலர், 12/10/2014.