காமராஜ் புதிரா? புதையலா?
காமராஜ் புதிரா? புதையலா?, எஸ்.பி. கணேசன், காமராஜ் விழிப்புணர்வு மையம், பக். 193, விலை 70ரூ.
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்வு, அவரின் சாதனை, வாழ்க்கை நிகழ்வுகள், அறிவுரைகள் ஆகியவற்றை இளந்தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லி, புரிந்தவர்களுக்கு அவர் புதிராகவும், புரிந்தவர்களுக்கு அவர் புதையலாகவும் இருப்பதை நல்ல விளக்கங்களுடன் தந்திருப்பது சிறப்பு. மற்ற தலைவர்கள்போல் அவர் தலைவர் மட்டுமல்ல, நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ இறைவன் அனுப்பி வைத்த தவப்புதல்வன் என்கிறார் நூலாசிரியர். அதாவது காமராஜரை கல்வி, அணைக்கட்டுகள், மின்சாரம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றை இத்தமிழ்மக்களுக்கு வழங்க வந்த அவதாரம் என நிறுவும் இடங்கள் பல உள்ளன. மாணவர்களும் அவர்களுக்கு போதிக்கும் ஆசிரியர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 16/11/2015.
—-
திருக்குறள் இன்பத்துப்பால், சிலம்பொலி சு. செல்லப்பன், மணிவாசகர் பதிப்பகம், பக். 288, விலை 150ரூ.
இன்பத்துப்பாலின் 25 அதிகாரங்களையும் அவற்றின் 250 குறட்பாக்களையும் ஐந்திணைப் பகுப்பகளாகக் கொண்டு அகப்பொருள் இலக்கணம் பொருந்த குறிப்புரை, ஒப்பீடு என தந்துள்ளதால் ஒரு ஆய்வுரையாக இந்நூல் திகழ்கிறது. திணை, கூற்று, விளக்கம், குறள், தெளிவுரை, கருத்து என ஒவ்வொரு குறளுக்கும் உரை எழுதப்பட்டுள்ளது. ஐந்திணை வாழ்க்கை முறையை வரிசைபட எழுதியுள்ளது உரையினுள் செல்வோருக்கு எளிதில் புரியும்படியான உத்தியாகும். ஓரளவே தமிழ் படித்தவர்களும் புரிந்துகொள்ளும் உரை. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 16/11/2015.