காமராஜ் புதிரா? புதையலா
காமராஜ் புதிரா? புதையலா, எஸ்.பி. கணேசன், காமராஜ் விழிப்புணர்வு மையம், விருதுநகர், பக். 192, விலை 70ரூ.
வட மாநிலங்களை விட கல்வி, தொழில் வளர்ச்சி, அணைக்கட்டு, மின்சாரம் என்று பல்வேறு துறைகளில் தமிழகம் இன்றும் முன்னிலையில் இருப்பதற்குக் காரணம், பெருந்தலைவர் காமராஜ் என்றால் அது மிகையாகாது. எளிய குடும்பத்தில் பிறந்து, பள்ளிக் கல்வி மட்டுமே கற்று, எந்தவொரு பின்னணியும் இன்றி, காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்களுக்கு இணையாக அரசியலிலும், மக்கள் மனதிலும் உயர்ந்த இடத்தைப் பிடித்தவர் காமராஜ். தமிழக முதல்வராக ஒன்பது ஆண்டுகள் மட்டுமே இருந்தாலும், தமிழக வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய சாதனைகள் புள்ளி விபரங்களுடன் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தவிர, காமராஜின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகளுடன், அவரது அரசியல் வளர்ச்சிக்கு யார், யார், எந்தெந்த வகையில் காரணமாக இருந்ததார்கள் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. அதே போல் அவரது நேர்மை, எளிமை, செயல்திறன், எதிரிகளையும் அரவணைக்கும் தன்மை, எதிர் கருத்துக்களை மதிக்கும் விதம், ஆளுமைத் திறன், தேச நலன், சமயோசித அறிவு, தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் – குறிப்பாக கல்வி வளர்ச்சியில் அவர் காட்டிய அக்கறை… என்று அவர் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை பல்வேறு தரப்பினரும் நினைவு கூர்ந்த அறிய தகவல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தலைவர் என்றால் காமராஜ் போல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை, இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது. -பரக்கத். நன்றி: துக்ளக், 2/8/2015.