காலச்சுவடுகள்
காலச்சுவடுகள், சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை,சென்னை – 18, விலை: ரூ. 545.
ஆந்திரா மாநிலம் தெலுங்கானப் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயிகள் போராட்டம், சட்டங்கள் அமல்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகள், தனித்தெலுங்கானா மாநிலத்திற்கான கோரிக்கை போராட்டம் உட்பட பல்வேறு வகையிலான போராட்டங்கள் நடத்திருக்கின்றன. இந்தப் போராட்டங்களால் அப்பகுதி மக்களின் பொருளாதாரம், சமூக, அரசியல் சார்ந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை விரிவாக விவரிப்பதே இந்த “காலச் சுவடுகள்” நாவல். நவீன் (எ) டொங்கரி மல்லய்யா தெலுங்கில் எழுதிய இந்த நாவலை தமிழில் இளம்பாரதி மொழிபெயர்த்துள்ளார். 1045 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல். கிராமப்புற வாழ்க்கையை விவரிப்பதில் தனி கவனம் செலுத்தப்பட்டிருப்பதால், கிராமத்தில் சிறுவன் ஒருவன் தன் தொடக்கநிலைக் கல்வியை பெறுவதற்கு ஏற்படும் சிரமங்களையும், அனுபவங்களையும் இந்த நாவல் மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது. கிராமத்துப் பழக்கவழக்கங்களை விமர்சனப் போக்கில் விளக்கும் நிகழ்ச்சிகள் இந்த நாவலின் அடிப்படை பலமாக உள்ளது. தமிழ்நாட்டு கிராம வாழ்க்கை முறை போன்ற சம்பவங்கள் பல இடங்களில் காணப்படுவதால், இதனை படிக்கும் போது தெலுங்கு நாவல் போன்று இல்லாமல், ஒரு தமிழ் நாவல் என்ற உணர்வைத்தான் அளிக்கிறது.
—
ராஜ கர்ஜனை, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை – 108, விலை: ரூ.250.
திப்புசுல்தானை கதாநாயகனாகக் கொண்டு தமிழில் சரித்திர நாவல் வரவில்லையே என்ற குறையை “ராஜ கர்ஜனை” புத்தகம் போக்குகிறது. இதன் ஆசிரியர் “இலக்கிய சாம்ராட்” கோவி. மணிசேகரன், கல்கி பத்திரிக்கையில் இந்த நாவலை 1978 – 79 ம் ஆண்டுகளில் தொடர்கதையாக எழுதி உள்ளார். ஹைதர் அலி, திப்புசுல்தான், பசவராஜ், ரங்கநாயகி ஆகிய நான்கு கதாபாத்திரங்களையும் வாசகர்கள் உள்ளத்தை கவரும் வண்ணம் உருவாக்கியுள்ளார். திப்புசுல்தானுக்கும், பசவராஜூக்கும் இடையே நடந்த வாள் சண்டையை தத்துரூபமாக வர்ணித்துள்ளார். “யுத்தத்தில் கொல்பவனோ, கொல்லப்படுபவனோ, பாவிகளாவதில்லை, அது இறைவன் சித்தம்! ஆத்மாவுக்கு நட்பேது? பாசமேது? உறவேது?” என்ற கீதை வரிகளை சுட்டிக்காட்டியிருப்பது கூடுதல் சிறப்பாகும். வீரத்தை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விருப்புபவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூலாகும். நன்றி: தினதந்தி (3.4.2013).