காஞ்சி ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள்
காஞ்சி ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள், மு.நஜ்மா, மு. கஸ்தூரி, அ.மோகனா, மு.காமாட்சி, பரிசல் புத்தக நிலையம், எண்.96, ஜெ.பிளாக், நல்வரவு தெரு, எம். எம். டி. ஏ. காலனி, அரும்பாக்கம், சென்னை – 106, விலை ரூ. 180.
மதத்தைப் பரப்புவதற்காக வந்த கிறிஸ்தவப் பாதிரியார்கள், தமிழ் மொழியில் மயங்கிய வரலாறு இது. இங்குள்ள மக்களை மனமாற்றமோ, மதமாற்றமோ செய்ய வேண்டுமானால் அவர்களது மொழியில் அதை செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்து தமிழுக்கான எழுத்துருக்களை உருவாக்குவது முதல் புத்தகங்கள் வெளியிடுவது வரை இந்தப் பாதிரியார்கள் இறங்கினர். ஏட்டுச்சுவடிகளாய் அழிந்து மக்கிக்கொண்டு இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சு வாகனம் ஏற்றி தமிழன்னையின் வாழ்நாட்களை நீட்டித்தவர்கள் இவர்கள். தமிழுக்குச் சேவை செய்த வெளிநாட்டினர் பெயரைக் கேட்டால், வீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவெல்… என்று ஒரிருவர் பெயரைத்தான் சொல்ல முடியும். ஆனால், இந்தப் புத்தகம் 17 பாதிரியார்கள், 6 அரசு அதிகாரிகள், 3 ஆராய்ச்சியாளரகளை நம் சிந்தனைக்கு வைக்கிறது. இந்திய அளவில் அச்சு நூல் முதன்முதலில் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக வேறு எந்த மொழியிலும் இல்லாத வகையில் நூல்கள் கொடுத்தவர் அண்ட்ரிக் அடிகளார். 1546 – ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து கோவாவுக்கு வந்தவர் இவர். யுனான் கோன்சால்வ் என்பவரால் உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துருக்களை வைத்து ‘தம்பிரான் வணக்கம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதுதான் தமிழில் வெளியான முதல் புத்தகம் அதன் பிறகு, வரிசையாகப் பல புத்தகங்கள் அச்சிடப்பட்டன. தமிழில் பேசத் தவறினால் தண்டனை என்று அந்தக் காலத்திலேயே அறிவித்து, அனைத்து பாதிரியார்களையும் தமிழ் படிக்கவைத்தவரும் இவர்தான். உரைநடையை உருவாக்கிய ராபர்ட் நோபிலி, தமிழகத் தாவரங்கள் குறித்து ஆய்வு செய்த ராட்லர், கல்வெட்டுகளைத் தொகுத்த டெய்லர் என அனைத்து ஆளுமைகளும் மறக்காமல் நினைவூட்டப்படுகிறார்கள். தமிழ் இலக்கணம், அகராதிகள் ஆகியவற்றை உருவாக்குவதில் இவர்கள் அதீத ஆர்வம் காட்டி இருக்கின்றனர். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகிய இரண்டையும் தமிழில் மொழிபெயர்க்க இவர்கள் எடுத்த முயற்சிகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இதில் உள்ளன. சீகன் பால்கு, பெட்ரீஷியஸ், இரேனியஸ், பெர்சிவல், ஹென்றி பவர் ஆகிய ஐந்து பேர் வெவ்வேறு காலகட்டத்தில் வேதாகமத்தை மொழிபெயர்த்துள்ளனர் இன்று நாம் படிப்பது ஹென்றி பவர் மொழிபெயர்ப்பு. அதுவரை ‘பராபான்’ என்று வரலாறும் இதில் இருக்கிறது. சென்னை பல்கலைக்கழக மாணவ, மாணவியர் தொகுத்த இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கும் பேராசிரியர் வீ. அரசு, ‘திண்ணைப் பள்ளிக்கூட மரபில் இருந்து நம்மை விடுவித்து, வளாகக் கல்வி முறைக்கு வழிகண்டவர்கள் ஐரோப்பியர்கள். இவ்வகையான கல்விக்கூடங்களுக்குத் தேவைப்படும் பாடநூல்களை உருவாக்கும் குழுக்களை உருவாக்கினர். இந்தப் பாடநூல்கள் வழியாக புதிய மொழி தமிழில் உருப்பெறத் தொடங்கியது. தமிழின் வளம் பல்கூறுகளில் பல்கிப் பெருகியது. தமிழ் மொழி, நவீனத் தமிழாக வடிவம் பெற்றது. இதற்கென உழைத்த பாதிரியார்களின் செயல்பாடுகள் மதிக்கத்தக்கவை’ என்கிறார். இந்த முன்னோட்டமான தொகுப்பை வைத்து ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனி வரலாறுகள் திரட்டுவதே அவர்களுக்குச் செய்யும் முழுமையான அஞ்சலி. – புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன் (27.3.2013).