கி.பி.1800இல் கொங்குநாடு

கி.பி.1800இல் கொங்குநாடு, புலவர் செ. இராசு, இடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், சேலம், பக். 352, விலை 195ரூ.

கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு கம்பெனி ஆட்சி நிலவிய காலத்தில் தமிழகம், ஆந்திரம், கேரளம், மைசூர் ப.கதிகள் எப்படி இருந்தன என்பதை பிரான்சிஸ் புக்கானன் என்பவர் அளித்த நிலைக் குறிப்புகள் வழியாக விளக்குகின்றனர் நூலாசிரியர்கள். டாக்டர் புக்கானன் சென்னையிலிருந்து கோவை வரையிலும், மைசூரிலிருந்து கரூர் வரையிலும் குறுக்கும் நெடுக்குமாக மேற்கொண்ட கள ஆய்வில் நேரடியாகக் கண்ட தகவல்களின் பதிவு மட்டுமின்றி, அந்த இடத்தின் அதற்கு முந்தைய வரலாற்றுக் குறிப்புகளும் காணக்கிடைத்துள்ளன. தமிழகம்-கர்நாடகம் இடையிலான பகுதிக்கு வணிக மார்க்கமாகத் திகழ்ந்த மேட்டூரில், அணை கட்டப்படுவதற்கு முன்பு சுங்கச் சாவடி இருந்திருப்பதையும், காவிரியின் குறுக்கே சிக்கதேவராயன் ஆட்சியிலேயே அணை கட்டப்பட்டு அது வெள்ளப்பெருக்கில் உடைப்பட்டிருக்கும் அரிய தகவலும், நங்கவளள்ளி முதல் சங்ககிரி, திருசெங்கோடு, பரமத்தி, நாமக்கல் வரை ஆற்றில் இருந்த பரிசல் துறைகளின் பெயர்களும் நமக்குக் காணக்கிடைக்கின்றன. நொய்யல் ஆற்றுக்கு தெற்கில் உள்ள கோவையின் பகுதிகளுக்கு தாராபுரமும், வடக்கில் உள்ள பகுதிகளுக்கு பவானியும் தலைநகராக இருந்திருப்பது, நீலகிரியில் 1819 வரை எந்த ஐரோப்பியரும் வசிக்கவில்லை என்ற தகவல் கோவை நகரில் அப்போது வெறும் 2 ஆயிரம் வீடுகள் மட்டுமே இருந்தன. விவசாய தோட்டத்தில் 8 முழ ஆழத்திலேயே நிரூற்று கிடைத்தது என்பன போன்ற தகவல்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன. கொங்குநாட்டில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சிகைளைப் பற்றியும் அறிய முடிகிறது. வரலாற்று ஆர்வலர்களும், மாணவர்களுக்கும் பயன்படும் நூல். நன்றி: தினமணி, 6/1/2015

Leave a Reply

Your email address will not be published.