குஜராத் மக்களின் வாழ்வு, நலவாழ்வா? நரக வாழ்வா?
குஜராத் மக்களின் வாழ்வு, நலவாழ்வா? நரக வாழ்வா?, ஜி.ஆர். இரவீந்திரநாத், சமூக மகத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், சென்னை, விலை 20ரூ.
குஜராத் நலமா? குழந்தைகளின் நலம்தான் ஒரு நாட்டின் ஆரோக்கியத்தின் அளவுகோல். பிறந்து ஒரு வருடத்துக்குள் இறந்துபோகிற குழந்தைகளின் எண்ணிக்கையை வைத்து ஒரு நாட்டின் மருத்துவ அக்கறையை மருத்துவ அறிஞர்கள் எடைபோடுகின்றனர். ஏதோ விதி முடிந்து போச்சு. செத்துபோச்சு என்று இன்னும் எவ்வளவு காலத்துக்குச் சொல்ல முடியும்? அதென்னப்பா வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் விதி முடிய மாட்டேங்குது? என்று குறுக்குகேள்வி கேட்கும் காலம் இது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குழந்தைகள் நலம் உள்ளிட்டு மக்கள் நலவாழ்வு பற்றிய விவாதம் நடைபெறவில்லை என்ற ஆதங்கத்தில் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் ஒரு நூலை எழுதியுள்ளார். ஒரு நாட்டின் மொத்த வருமானத்தில் ஐந்து சதவீதமாவது மருத்துவத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பது உலக அளவிலான எதிர்பார்ப்பு. ஆனால் இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு சதவீதத்துக்கும் கொஞ்சம் அதிகமாகத்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் விளைவாக இந்தியாவில் பிறக்கிற ஆயிரம் பச்சிளம் குழந்தைகளில் 47 குழந்தைகள் ஒரு வருடத்திற்குள் இறந்துபோகின்றன. நம்மை விட அதிகமான மக்கள் தொகையும் குறைந்த வளங்கள் கொண்ட நிலப்பரப்பும் உள்ள சீனாவில் ஆயிரத்துக்கு 13 குழந்தைகளே இறக்கின்றன. 1000த்துக்கு 37 என்பது உலக சாராசரி. அதையும் விட அதிகமாக நமது குழந்தைகள் இறக்கின்றன. அதிலும் தலித் பழங்குடி மக்களின் குழந்தைகள் அதிகமாக இறக்கின்றன என்று ஆதங்கப்படும் நூலாசிரியர் அதற்கான பல்வேறு ஆதாரங்களை நம்முன் வைக்கிறார். இந்தியாவில் பிரசவங்க்ளின்போது இளந்தாய்மார்கள் இறந்துபோவது, மருத்துவம் தனியார்மயமாகி இருப்பது, உள்ளிட்டவற்றையும் விவாதிக்கிற அவர், இந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் நலவாழ்வு நிலைமையை ஒப்பிடுகிறார். இந்திய மாநிலங்களில் மிகச் சிறந்த முறையில் வளர்ச்சியடைந்த மாநிலமாகக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் முன்னிறுத்தப்பட்டதால் அதன்மீது கூடுதல் கவனத்தை நூலில் செலுத்தியுள்ளார். இது பற்றி ஆரோக்கியமான அரசியல் விவாதம் நடக்க வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டும் நூல். -த. நீதிராஜன். நன்றி: தி இந்து, 9/8/2014.