கும்பகோணத்தில் உலா
கும்பகோணத்தில் உலா, வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன், யுனிவர்சல் பப்ளிஷிங், பக். 376,விலை 270ரூ.
சோழ வளநாட்டின் சரித்திரத்தை குடந்தை நகருக்குச் சிறப்பான ஒரு பெரும் பங்குண்டு என்று கூறுவர். குடந்தையின் பெருமையை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், பேயாழ்வார் போன்றோர் போற்றிப் பாடியுள்ளனர். மகாமகக் குளத்தின் சிறப்பு, திருக்கோயில்களின் சிறப்பு போன்றவற்றைக் கல்வெட்டுச் சான்றுகளுடனும், தேவாரப் பாடல்களுடனும் புராணக் குறிப்புகளுடனும் தந்திருப்பது சிறப்பு. குடந்தை மட்டுமின்றி, குடந்தையைச் சுற்றியுள்ள திருவலஞ்சுழி, சுவாமிமலை, பட்டீஸ்வரம், திருபுவனம், திரவிடைமருதூர் முதலிய ஊர்களில் உள்ள கோயில்களைப் பற்றிய விளக்கமும் உள்ளது. கும்பகோணத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, பெரும் புகழ்பெற்ற ஆன்றோர்கள், அரளாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் அனைவரைப் பற்றியும் விளக்கிக் கூறியிருப்பது இந்நூலை மெருகேற்றியுள்ளது. ‘இலக்கணம் அமைத்த இலக்கியம்’ என்ற தலைப்பில் திருக்குடந்தை பற்றிய தேவாரத் திருப்பதிகங்கள், தலபுராணங்கள், தோத்திரங்கள், பிள்ளைத்தமிழ், குடந்தை வெண்பா, கும்பேசர் குறவஞ்சி, மங்களாம்பிகை மாலை, மகாமகக் கும்பி, மகாமகச் சிந்து, குடந்தை அந்தாதி முதலிய இலக்கியங்களையும் வரிசைப்படுத்தித் தந்திருக்கிறார் நூலாசிரியர். இந்த உலா நூல் கையில் இருந்தால், கும்பகோணத்தில் யார் உதவியும் இல்லாமல் எல்லா இடங்களிலும் உலா வரலாம். நன்றி: தினமணி, 14/3/2016.