இலட்சியப் பெண்டிர்
இலட்சியப் பெண்டிர், தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம், பக். 160, விலை 125ரூ.
பெண்களுக்கு மகுடம் சூட்டும் நூல்! சங்க காலத்தில், 45 பெண் புலவர்கள் இருந்தனர். இடைக்காலத்தில், காரைக்கால் அம்மையார், ஆண்டாளுக்குப் பிறகு, பெண்களுக்குக் கல்வி ஏன் மறுக்கப்பட்டது? இதை விரிவாக ஆய்வு செய்து, சாதனை செய்த ஒன்பது பெண்களின் சரித்திரத்தை அழகாகவும், ஆழமாகவும் இந்த நூலில் தந்துள்ளார் நூலாசிரியர், பாராட்டத்தக்கவர். அந்தண விதவைப் பெண்கள், ஆவுடையக்காள், துளசி அம்மாள், சுப்புலட்சுமி அம்மாள், லட்சுமி அம்மாள், செல்வம்மாள் போன்ற, 40க்கும் மேற்பட்ட கவிதாயினிகளை, கலங்கரை விளக்கமாகக் காட்டியுள்ளார். தொல்காப்பியத்தில் பெண் ஆளுமை, சங்ககாலப் பெண் கல்வி, பாலைத் திணையின் பரிவு, கம்பண்ணன் மனைவி கங்காதேவி வீரம், ஜைனக் கவிதாயினி கந்தியார், ‘அம்மா’ யார்?, அவ்வையின் கல்வி போன்ற கட்டுரைகள் சிறப்பானவை. திருவையாறு தியாகராஜ சுவாமிகளை உலகுக்கு உணர்த்திய பெங்களூரு நாகரத்தினம் அம்மாளின் படைப்பாற்றல் வை.மு. கோதைநாயகி, அன்னம்மாள், கோ.நடேச மீனாட்சி, காரைமகள், சம்பூரணம், ஹா.கி. வாலம் ஆகிய கதையும் கவிதையும் படைத்த எழுத்துலக பட்டத்தரசிகளைத் தேடித் தேடி, ஆராய்ந்து, அரிய பல செய்திகளை எழுதி, நம்மை வியக்க வைத்துள்ளார். இஸ்லாமியரின் படை எடுப்பில் சிதம்பரம் நடராஜர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், ராமேசுவரம் கோவில்கள் இக்கப்பட்டதை, ‘மதுராஜியம்’ எனும் சமஸ்கிருத காவியமாக, மன்னன் கம்பண்ணனின் ராணி கங்காதேவி, போர்க்களம் சென்று பாடியுள்ளது மிக அரிய தகவல். மைசூரு அரண்மனையில் அரசவைப் பாடகி, நடனமாது ஆன நாகரத்தினம்மாள், கன்னடம், சமஸ்கிருதம், தமிழ், மும்மொழிப் புலமை மிக்கவர். மொழிபெயர்ப்பு நூல்கள், பாடல்கள் எழுதியவர், தேவதாசி மரபைச் சார்ந்தவர். இவரே திருவையாற்றில் தியாகப் பிரம்மத்திற்கு, 1925ல், சமாதி கோவில் கட்டி, ஆறு நாட்கள் கச்சேரி நடத்திக் காட்டியவர். தன் எல்லா சொத்துக்களையும் அதற்கே தந்தவர் என்ற செய்திகள் வியப்பானவை(பக். 93). சமையலறையில் சிறைப்பட்ட பெண்களை விடுவித்து, வரவேற்பறையில் விருது பெற நிறுத்தி வைக்கும், லட்சியப் பெண்களின் ஆவணம் இந்த நூல். -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 6/3/2016.