குயிலின் தியாகத்தில் வேலு நாச்சியாரின் வெற்றி
குயிலின் தியாகத்தில் வேலு நாச்சியாரின் வெற்றி, ஆலம்பட்டு சோ. உலகநாதன், கமலா உலகநாதன், நினைவு திருக்குலக் கல்வி அறக்கட்டளை, ஆலம்பட்டு, குருந்தம்பட்டு அஞ்சல், கல்லல் வழி 630305, பக். 104, விலை 80ரூ.
சிவகங்கை சீமையின் விடுதலைக்காக வேலு நாச்சியாரின் வெற்றிக்காக, தன்னையே வெடிகுண்டாக மாற்றி, ஆயுதக் கிடங்கில் குதித்து, உயிர் நீத்த தியாகி குயிலிதான், தீப்பாஞ்ச அம்மன் வடிவமாக வழிபடுவதாக நூலாசிரியர் தம் ஆய்வுகள் மூலம் நிறுவ முற்பட்டுள்ளார். காளையார் கோவில் போரில் துவங்கி, ஆயுதக் கிடங்கில் குதித்த முதல் மனித குண்டு குயிலி, ஒரு சாகசமான உளவாளி என்பது வரை, வரலாறு இதில் கதை வடிவம் பெற்றுள்ளது. இருநூறு ஆண்டுகளே ஆன, தமிழக வரலாற்றை தமிழர்கள் சரியாக பதிவு செய்யவில்லை என்று, ஆதங்கப்படும் நூலாசிரியர் ஆங்கில வரலாற்றாசிரியர்களின் குறிப்புகள் பற்றி, ஏதும் குறிப்பிடவில்லை. எனினும், அவரது ஆய்வுகள் புதிய வரலாற்றை உருவாக்கலாம். -பின்னலூரான்.
—-
பகவான் யோகி ராம்சுரத் குமார் சரிதம், பாலகுமாரன், விசா பப்ளிகேஷன்ஸ், பக். 136, விலை 175ரூ.
மனித மனம் தோன்றி நாள் தொடங்கி இன்றுவரை, கடவுளைத் தேடல் என்கிற சிந்தனை இருந்துகொண்டுதான் உள்ளது. பெரும்பாலான துறவிகள், கடவுளை அறிந்தது போல் பேசுகின்றனர். கடவுள் தேடல் என்பது, சத்தியத்தோடு சேர்ந்தது என்பதை, இந்நூல் உணர்த்த முயல்கிறது எனலாம். பகவான் யோகிராம் சுரத்குமாரை, விசிறி சாமியார் என்றுதான் பலரும் அறிவர். அவர் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இந்நூல், அவர் பக்தர்களுக்கு ஒரு பிரசாதம் ஆகும். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 28/7/2013.