ஹிட்லரின் மறுபக்கம்
ஹிட்லரின் மறுபக்கம், வேங்கடம், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-498-6.html
ஹிட்லர் என்ற பெயருலுக்கு இருக்கும் பிரபலமும் கவர்ச்சியும் உலகில் வேறு எவருக்கும் இல்லை. அவர் எழுதிய புத்தகமும் அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகமும் எத்தனை முறை வெளியிட்டாலும் எத்தனைபேர் வெளியிட்டாலும் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் வாசிக்கப்படுகிறது. எனவே உலகத்தின் ஹீரோக்களில் ஒருவராகத்தான் ஹிட்லரை சொல்ல வேண்டும். தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, இறந்துபோன பிறகும் போற்றப்படும் விமர்சிக்கப்படும் மனிதனாக இருக்கும் ஹிட்லரின் மறுபக்கத்தை எழுதி இருக்கிறார் வேங்கடம். மிக வறிய குடும்பத்தில் பிறந்து, பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காமல் வியன்னா மூணிக் வீதிகளில் பரதேசிபோல் சுற்றித் திரிந்த நிரந்தர வேலையில்லாத ஒருவன், சொற்ப வருடங்களில் தன் பேச்சாற்றல், பயமுறுத்தல்கள், நேரடியான குற்றச்சாட்டுகள் மூலம், இனவாதத்தின் துணைகொண்டு வரம்பில்லா அதிகாரத்தை அடைந்து உலகையே நடுநடுங்கச் செய்தான் என்றால் யார்தான் அதை முழுமையாக நம்புவார்கள்? என்ற கேள்விக்கு பதில் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. நம்பித்தான் ஆகவேண்டும். யூதர்களுக்கு எதிரான தன்னுடைய வெறுப்பை, தனக்குள் புதைந்திருக்கும் குரூரத்தை ஒரு கொள்கையாக சித்தாந்தமாகச் சொல்லாமல் மதமாக மாற்றிவிட்டால் மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகமாக மக்கள் மாறுவார்கள் என்பதை ஹிட்லர் உணர்ந்தார். அறிவு கொண்டவனுடன் சண்டை இடுவது கடினம் என்பது ஹிட்லரின் மொழி, அறிவு ஊட்டுவதைவிட, சண்டை போட உடல் பயிற்சி கொடுப்பதைவிட ரத்தச் சுத்திகரிப்பில் ஹிட்லர் இறங்கினார். இப்படிப்பட்டவர்கள் மூலமாக குழந்தைகள் உற்பத்தி செய்யும் மையங்களை உருவாக்கி யூத எதிர்ப்பு உயிர்களைப் பிறக்க வைத்த கதைகள், அதிரவைப்பவை. குடிக்காத, புகை பிடிக்காத, மாமிசம் சாப்பிடாத, பெண் தொடர்பு இல்லாத ஹிட்லரால் பல்லாயிரக்கணக்கான மக்களை மட்டும் எப்படி படுகொலை செய்ய முடிந்தது? இதற்குப் படுகொலை காட்சிகளைத் தனியறையில் உட்கார்ந்து வீடியோ பார்த்து மகிழ எப்படி முடிந்தது? தன்னை நம்பும் தன்னை மட்டும் நம்பும் ஒருவிதமான மனவியாதி இது. அவரது குடும்பத்தில் பலரும் பல்வேறுவிதமான மனவியாதி பாதிக்கப்பட்டவர்களாக இருந்துள்ளனர். இதற்காக எடுத்துக்கொண்ட அனைத்துச் சிகிச்சை ஆவணங்களையும் தன்னுடைய தற்கொலைக்கு முன்னதாக அழித்துவிட்டார் ஹிட்லர். தன் காதலியிடம் தினமும் தன்னை அடிக்கச் சொல்லி கதறுபவராக இருந்தார் ஹிட்லர். இப்படி நுணுக்கமான தகவல்கள் இந்தப் புத்தகமும் முழுக்க இருக்கின்றன. உலகில் இன்றும் இத்தகைய இனவெறி அதிபர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் புரிந்துகொள்ளவும் இந்தப் புத்தகம் பயன்படும். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 28/8/2013
