குரு விஜயேந்திரா

குரு விஜயேந்திரா – தி இன்வின்சிபிள் செயின்ட், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 320, விலை 300ரூ.

கயிற்றின் மீது நடந்த விஜயேந்திரர்! மாத்வ பரம்பரையில் ராகவேந்திரரைப் பற்றி அம்மன் சத்தியநாதன் எழுதிய நூல் மிக அற்புதமானது. அந்த வரிசையில், வெல்ல இயலாத குரு விஜயேந்திரர் பற்றிய விரிவான வரலாற்றையும், தமிழில் எழுதியுள்ளார். மூல பிருந்தாவனம் அமைந்துள்ள கும்பகோணம் பற்றியும், அங்கு அவர் செய்த அற்புதங்கள் பற்றியும், இந்த இரண்டாம் பாகத்தில் மிக விரிவாகவும், பக்தியோடும் எழுதியுள்ளார். அதை யாவரும் புரிந்துகொள்ளும் எளிய ஆங்கிலத்தில் லட்சுமணன் இந்த நூலில் மொழிபெயர்த்துள்ளார். சரளமான ஆங்கில மொழிபெயர்ப்பால், நூல் ஆங்கில நாவல்போல் விறுவிறுப்புடன் நகர்கிறது. சுவாமிகள் சவால்களை ஏற்பதும், அதில் வெற்றிக்கொடி நாட்டுவதும் பக்தி சாகசங்கள். விஜயநகரப் பேரரசிற்கு குரு விஜயேந்திரர் எழுந்தருள்வது, புனித யாத்திரை மேற்கொள்வது, மோடி மஸ்தான் மாயாஜால வித்தையில், ஏழாவது வட்டத்திற்குள் வைத்த மாய மந்திர எலுமிச்சம் பழத்தை, தன் மூலராமர் மந்திர சக்தியால், சீடன் பீமசேனனை விட்டு எடுத்துவரச் செய்வது ஆகிய சம்பவங்கள், சரித்திரக் கதைபோல வெகு அழகாக சொல்லப்பட்டுள்ளன. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தையும், சாரங்கபாணி பெருமாள் கோவில் ராஜகோபுரத்தையும் கயிறால் இணைத்து அதன்மேல் நடந்து காட்டினார். தேவகியிடம் ருக்மணி கேட்ட குழந்தைப் பருவ கண்ணன் லீலைகளும், அதை மறுபடியும் காண ருக்மணி ஆசைப்பட்டதும், அதனால் உண்டான கிருஷ்ண விக்கிரகமும், அந்த துவாபரயுகத்தின் சிலை, கலியுகத்தில் உடுப்பியில் உள்ளது என்பதும் வெகு அழகாக, ஆற்றோட்டமாக ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது. தேவதாசி 64 கலைகளில் ஒன்றான, ‘காமக்கலை’ துறவி விஜயேந்திரருக்குத் தெரியாது தோற்றுவிடுவார் என்று நினைத்தார். அடாவடியாக, கேரளத்து அழகியர் அவரை போட்டிக்கு அழைத்தனர். குடந்தை கும்பேஸ்வரர் முன் தவம் இருந்து, மன்மதனை எரித்த சிவனது அருளால், வெற்றி பெற்று, தேவதாசி தன் தவறுக்கு மனனிப்புக்கேட்டு, அவருக்கு பக்தை ஆன வரலாறு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சசியின் படங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் நம்மிடம் பேசுகின்றன. மூலராமரின் பக்தியால் தன்னிகர் இன்றி விளங்கிய மத்வ மடத்தின் தனிப்பெரும் துறவி, தோல்வியே காணாத துறவி விஜயேந்திர சுவாமிகளின் வரலாற்று நூல். இதை படிப்பவர் அவரது பக்தராக மாறிவிடுவர். -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 13/12/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *