கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை
கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை, ராஜம் முரளி, எழுத்தாக்கம் பிரேமா நாராயணன், விகடன் பிரசுரம், பக். 168, விலை 110ரூ.
அழகைப் பராமரிப்பது என்றதுமே நமக்கு உடனே இந்த ஷாம்புவைப் பயன்படுத்துங்கள். இந்த சோப்பை உபயோகியுங்கள் என்பன போன்ற விளம்பரங்கள்தாம் நினைவுக்கு வரும். இதற்கு மாறாக, தலை முதல் பாதங்கள் வரை அழகுபடுத்த இந்நூலாசிரியர் சொல்லியிருக்கும் அழகு சாதனப் பொள்கள் எல்லாமே நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண, இயற்கைப் பொருள்கள்தாம். அந்த இயற்கை அழகு சாதனப் பொருள்களைத் தயாரிக்கும் முறைகளும் எளிமையான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றன. பார்லி அரிசியைக் குழைய வடித்து, கஞ்சி இறக்கி அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலைத்தூள், ஒரு டீ ஸ்பூன் கொள்ளுத்தூள் கலந்து சாப்பிட்டுப் பாருங்கள், தொப்பை தன் தப்பை உணர்ந்துவிடும். நாள்பட்ட போலீஸ் தொப்பைக்கும் இது பொருந்தும் என்று தொப்பையைக் குறைக்க வழி சொல்லப்பட்டிருக்கிறது. சிலருக்கு குங்குமம், சாந்து, ஸ்டிக்கர் பொட்டு என எதுவுமே ஒத்துக் கொள்ளாமல், அவர் ஜியாகி, அந்த இடம் நிறம் மாறி தழும்பாகும். வெள்ளை எள்ளுடன், கசகசா, பயத்தம் பருப்பு சேர்த்து ரவை மாதிரி பொடித்து, பொட்டு வைக்கிற மாதிரியே திக்காக வைத்துக்கொண்டு இரவு தூங்கி, காலையில் கழுவவும். இதை தினசரி செய்து வர, நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு அனைவரும் பயன்படும் அருமையான அழகுக் குறிப்புகளின் தொகுப்பு நூல். நன்றி: தினமணி, 24/8/2015.