சகாயம் சந்தித்த சவால்கள்
சகாயம் சந்தித்த சவால்கள், கே. ராஜாதிருவேங்கடம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, வலை 80ரூ.
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து இந்தச் சொற்களை எங்கே கேட்டாலும் ஒரு முகம் உங்கள் மனக்கண் முன்வந்து நிற்கும். அவர்தான் சகாயம். ஊழல், முறைகேடு, விதிமீறல் செய்பவர்களுக்கு சகாயம் எப்போதும் ஒரு கஷாயம். அதிகார வர்க்கத்தின் எந்தப் பதவியில் இருந்தாலும் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக்கொண்டு இருக்கக்கூடிய ஒருசில அதிகாரிகளில் சகாயமும் ஒருவர். பல அதிகாரிகள் தன்னளவில் நேர்மையானவர்களாக இருந்தால்போதும் என்று நினைப்பார்கள். ஆனால் சகாயம் தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் நேர்மையானவராக மாற்றும் பிரசாரத்தையும் தொடர்ந்து செய்து வருபவர். அப்படிப்பட்ட சகாயத்தின் பணிக்காலத்தை உடனிருந்து கவனித்த பத்திரிகையாளர் கே. ராஜாதிருவேங்கடம் தொகுத்து, எளிய நடையில் எழுதியுள்ள புத்தகம் இது. சகாயம் சந்தித்த சவால்கள் முதன்முதலாக அந்தரங்கத்தில் இருந்து அம்பலத்துக்கு வருகிறது. சிலிர்ப்பூட்டும் சித்தனவாசல் ஓவிய ஊருக்குப் பக்கத்தில் பெருஞ்சுனை என்ற கிராமத்தில் அடுத்தவர் வீட்டுக்குச் சொந்தமான மரத்தில் ஒரே ஒரு மாங்காயை எடுத்ததைக்கூட அனுமதிக்காத தாய்க்கும், தனக்குச் சொந்தமான நிலத்தின் வரப்பைத் தாண்டி ஒரு இஞ்ச்கூட கூடுதலாக ஆக்கிரமிக்க விரும்பாத தந்தைக்கும் பிறந்த மகன் சகாயம். தன்னளவில் அப்படி ஒரு குடும்பம் வாழ்வதில் சிக்கல் இல்லை. ஆனால் அரசாங்க அதிகாரியாக வரும் வாரிசால் அப்படி இருக்க முடியுமா? ஐ.ஏ.எஸ். ஆன பிறகும் அப்படி வாழ்ந்து காட்டுவதில்தான் சகாயத்தின் சாதனை அடங்கியிருக்கிறது. 21 ஆண்டுகளில் 21 பணியிடங்களுக்குப் பந்தாடப்பட்டதன் பின்னணியும் அதில்தான் இருக்கிறது. காஞ்சிபுரம் ஆர்.டிஓ.வாக இருந்தபோது ஒரே ஒரு பெப்ஸி பாட்டிலில் இருந்த சுகாதாரக் கேட்டைத் தடுக்க அதன் யூனிட்டை பூட்டியது முதல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பல்லாயிரம் கோடி வர்த்தகம் கொடுத்த கிரானைட் நிறுவனங்களின் மூச்சை அடக்கியது வரையிலான காலகட்டங்கள், தமிழக நிர்வாகப் பரப்பில் நீண்ட காலங்கள் நான் நேர்மையான அதிகாரியாக இருப்பேன் என்று சபதம் செய்துவிட்டு வருபவர்கள், ஆறே மாதங்களில் அதிகாரத்தின் சுவைக்கு அடிமையாகி சபலம் ஆகிவிடுவது உண்டு. அப்படியானால் நிர்வாகத்தில் தூய்மையை ஏற்படுத்துவது எப்படி? சகாயம் ஒரே ஒரு வழியைத்தான் சொல்கிறார் ஆடம்பரம் தவிர்த்த வாழ்க்கை. ஓர் ஏழை நாட்டில் அரசு ஊழியரின் தேவைக்கு இன்று அரசு போதுமான அளவு சம்பளம் அளிக்கிறது. ஆனால் ஆசைக்கும் பேராசைக்கும் யாராலும் சம்பளம் அளிக்க முடியாது. அடிப்படைத் தேவைக்கு யார்தான் கூலி தர முடியும்? என்று கேட்கிறார் சகாயம். மதுரையில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுசிங்கில் கடனுக்கு ஒரு வீடும், வங்கியில் 7172 ரூபாயும்தான் என்னுடைய சொத்து என்று முதன் முதலில் தனது சொத்துப் பட்டியலை அகில இந்தியாவிலேயே அறிவித்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அவரால் இருக்க முடிந்தது. அந்த பற்றற்ற வாழ்க்கையால்தான், ஊழலுக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் அவர் இயக்கம் தொடங்குவார் என்று சொல்வார்கள். ஆனால் அவர் இப்போதும் இயக்கமாகத்தான் இருக்கிறார். -புத்தகன் நன்றி: ஜுனியர் விகடன், 2/3/2014.