சட்டப்பேரவையில் கே.டி.கே. தங்கமணி
சட்டப்பேரவையில் கே.டி.கே. தங்கமணி, தொகுப்பு கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 500ரூ.
காரியத்தில் கறாராக இருந்த கண்மணி தமிழக சட்டசபையில் நடந்த ஒரு வினோதக் காட்சியைப் பற்றி சொல்கிறார் கே.டி.கே. தங்கமணி (பக். 433). கடந்த, 1973ம் ஆண்டு, தமிழக சட்டசபையில், சபாநாயகர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்., தி.மு.க., வில் இருந்து வெளியேற்றப்பட்ட நேரம் அது. அவருக்கு ஆதரவான குரல்கள், சட்டசபையில் ஒலிக்காமல் தடுக்க, தி.மு.க.வினர் பல்வேறு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சபாநாயகர் மேசை மீது இருந்த மணியை, அப்போதைய தி.மு.க. கொறடா அழகமுத்து, எடுத்து வைத்துக் கொண்டுவிட்டார். மணி அடிப்பவர் எல்லாம் சபாநாயகராக ஆகிவிடலாம் என்பது, அவரது எண்ணம். இன்னும் சில உறுப்பினர்கள், சபாநாயகர் மேசை மீது இருந்த பேப்பர்களை எடுத்துக் கொண்டுவிட்டனர். அந்த பேப்பர்கள் மூலம் சபாநாயகராகிவிடலாம் என்பது அவர்களது உறுதிப்பாடு. சட்டசபை உறுப்பினர்கள் மட்டுமல்ல, சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முதல்வரே, அப்போது அராஜகத்தை ஆதரித்திருக்கிறார். தி.மு.க., ஆட்சியிலே ஆளுங்கட்சியாக இருக்கின்றவரையில்தான் தண்ணீரில் போட்ட பாஸ்பரஸ். மறந்து விடாதீர்கள்! ஆட்சிப் பீடத்திலிருந்து இறங்கினால் அது கூரைமீது போடப்பட்ட பாஸ்பரசாகிவிடும் என்று பேசியிருக்கிறார், அப்போதைய முதல்வர் கருணாநிதி. இது ஒரு முதலமைச்சர் செய்யக்கூடிய பிரசங்கமா என்று கேட்கிறார் கே.டி.கே. தங்கமணி (பக். 611). கிட்டத்தட்ட, 1000 பக்கங்களில் தொகுக்கப்பட்ட இந்த நூல், தமிழக அரசியல் பற்றியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை பற்றியும், தெளிவான புரிதலை வேண்டுவோருக்கு அவசியமான கையேடு. அது பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமாக இருந்தாலும், உள்ளாட்சி மன்ற சட்டத் திருத்தமாக இருந்தாலும், நம்பிக்கையில்லாத் தீர்மானமாக இருந்தாலும், கே.டி.கே. தங்கமணி தன் காரியத்தில் கண்ணாக இருந்த கண்மணி என்றே சொல்ல வேண்டும். அவருடைய காரியம், உழைக்கும் மக்களின் உரிமைப் பாதுகாப்பு. அதில் அவர் கறாராகவே இருந்திருக்கிறார் என்பதை, ஒவ்வொரு பக்கத்திலும் பதிவு செய்கிறது கே. ஜீவபாரதியின் தொகுப்பு. -சுப்பு. நன்றி: தினமலர், 31/5/2015.