சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்
சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும், டி. ஞானையா, அலைகள் வெளியீட்டகம், சென்னை – 600 024, பக்: 416, விலை: ரூ. 260.
ஒபாமாவையும், இந்திய தலித்துக்களையும் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ள அதே, டி. ஞனையாவின் மற்றொரு புத்தகம் இது. நூல்களின் தலைப்பே, இவர் எதைப் பற்றி எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறார் என்பது புரிந்துவிடுகிறது. கம்யூனிச இயக்கத்துடன் தொடர்பும், ஈடுபாடும் கொண்டுள்ள இவருக்கு, இஸ்லாமிய – கறுப்பினர் இனக் கலப்புப் பிரதிநிதியும், அமெரிக்க (முதலாளித்துவ – ஏகாதிபத்ய) நாட்டின் அதிபருமான ஒபாமாவைப் பற்றிய புரிந்துணர்வில், ஒரு வித்தியாசமான சிந்தனையை கொண்டிருக்கிறார் என்பதை வாசகர்கள் எதிர்பார்க்க்கலாம். ஒபாமாவின் ஆட்சிக் கால பயங்கரவாதம் பற்றிய தகவல்களில், மென்மைப் போக்கை அதிகம் கையாள்வதைப் பார்க்க முடிகிறது. காரணம் உளுத்து வரும் பொதுவுடமை தத்துவங்களை விளக்குவதில், ஆர்வம் காட்டுகிறார். புத்தகத்தில் பயங்கரவாதத்தைப் பற்றி பல்வேறு பரிமாணங்களில் செய்திகளும், சமூக மீடியாக்களில் கருத்துக்களும் வரும் நேரத்தில், பழைய பாதையில் பயங்கரவாதத்தை விவரித்திருப்பது சற்று நெருடலாக உள்ளது. தகவல்களைச் சேகரித்து, தனது நூலுக்கு ஏற்புடையது என்று கருதியவற்றை, நன்கு கோர்வைப்படுத்தி எழுதியுள்ளார். ஆனால், அவற்றுள் பல சர்ச்சைக்கும், சந்தேகத்திற்கும், விவாத்திற்கும் உட்பட்டவை, ஏனெனில், பயங்கரவாதம் பற்றிய பரிமாணம் நாளுக்கு நாள் விரிந்து வருகிறது. – ஜனகன்.
—
காஞ்ஜியும் பாட்ஜியும், தமிழண்ணாவெளியீடு, டி. கே. பப்ளிஷர்ஸ், 14 / 10, சாயிராம் அவென்யூ முதல் தெரு ஜெய்நகர், வளசாரவாக்கம், சென்னை – 600 087, பக்: 44, விலை: ரூ. 110.
சிறுவர்களுக்கான சித்திரக் கதை. கண்ணைக் கவரும் வண்ணப் படங்களை ஓவியர் ஷேக் அருமையாக வரைந்திருக்கிறார். தமிழண்ணா கதை சொல்லியிருக்கும் பாங்கு அருமை. – எஸ். குரு.
—
திருப்பட்டூர் அற்புதங்கள், வி. ராம்ஜி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 600 002, பக்: 192, விலை: ரூ. 90.
வியாக்ரபாதர் என்னும் முனிவரால் உருவாக்கப்பட்ட திருத்தலம் திருப்பட்டூர் சிவத்தலம். வில்வ மரத்தில் ஏறி வில்வ இலைகளைப் பறித்து, சிவலிங்கத்தை வழி படுவதற்கு வசதியாக, இறைவனிடம் புலிப்பாதம் வேண்டி, வியாக்ரபாதர் தவம் செய்த இடம்தான் இது. வியாக்ர என்னும் சொல் புலியைக் குறிக்கும். பாதம் புலியின் பாதத்தை உணர்த்தும். திருப்பட்டூரில் அமைந்துள்ள திருக்குளம், புலிப்பாதத்தின் வடிவில் அமைந்திருக்கும் அற்புதம். பாம்பாக மாறிய பதஞ்சலி முனிவர், பாம்பாக இருந்து பதஞ்சலியாக மாறிய அவரது வரலாறு என, இறை அற்புதமாக விவரித்துச் சொல்கிறது இந்த நூல். எளிய நடையில் அமைந்துள்ளது நூலின் சிறப்பு. – முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர் (7.4.2013).