சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார்
சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார், வெ. மு.ஷா. நவ்ஷாத், ஓவியம் பதிப்பகம், மதுரை, பக். 160, விலை 110ரூ
இயக்குநர், நடிகர், வசனகர்த்தா என்று பல துறைகளில் சாதனையாளராகத் திகழ்ந்தவர் பாக்யராஜ். இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளில் அவரது பாணியில் அமைந்த திரைப்படங்கள் தமிழக மக்களைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தன என்றால் அது மிகையாகாது. முந்தானை முடிச்சு தொடங்கி பாக்யராஜ் இந்திய 24 திரைப்படங்களின் துணை கொண்டு, அவரது அறிவுகூர்மையையும் விரிவாக அலசியிருக்கிறார் நூலாசிரியர். மேலும் ஒவ்வொரு திரைப்படத்தை இயக்கும்போதும் அவருக்கு ஏற்பட்ட சிரமங்கள், கடைபிடித்த பாணி, உழைப்பு ஆகியவற்றையும் எழுதியிருக்கிறார். பாக்யராஜிடம் சினிமா பயின்று இயக்குநர்களாக வெற்றி பவனி வந்த பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோரைப் பற்றியும், அவர் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகர்கள், பாடலாசிரியர்கள் என்று அனைவரும் இந்நூலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். திரையுலகம் தாண்டி பத்திரிகையுலகிலும் முத்திரை பதித்து வருபவர் பாக்யராஜ். அவருக்கு சின்ன வாத்தியார் என்று பெயர் வைத்திருப்பது சாலப் பொருத்தமானதுதான் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் பல பயனுள்ள தகவல்களைப் பத்தகம் முழுவதும் பதிந்திருக்கிறார் நூலாசிரியர். நன்றி: தினமணி, 26/10/2015.