சிவ சாகரத்தில் சில அலைகள்
சிவ சாகரத்தில் சில அலைகள், தொகுப்பாசிரியர் – எஸ். கணேச சர்மா, சனாதன பப்ளிகேஷன்ஸ், சபரிசனாதன, 142, கிரீன்வேஸ் ரோடு, ஆர். ஏ. புரம், சென்னை – 28, விலை 40 ரூ.
தமிழகத்தில் 20 ஆம் நூற்றாண்டில் அவதரித்த மகாபுருஷர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். அந்த மகா பெரியவரால், ‘என் தம்பி சாச்சு பிறவியிலேயே மஹான்’ என்று பாராட்டப் பெற்றவர் ஸ்ரீ சிவன் சார். அந்தளவிற்கு இவர் ஞானத்திலும், குணத்திலும், விசாலமான அறிவிலும், பற்றற்ற தன்மையிலும், எளிமையிலும், பக்தர்களிடம் பரிவு காட்டுவதிலும், உருவத்திலும்… என்று எல்லா நிலைகளிலும் தன் சகோதரராகிய மகா ஸ்வாமிகளை அச்சில் வார்த்ததுபோல் இருந்தவர். எல்லோராலும் ஸ்ரீசிவன் சார் என்று செல்லமாக அழைக்கப்பட்ட இம்மஹானின் இயற்பெயர் ஸ்ரீ சதா சிவ சாஸ்திரிகள். இவரது குடும்பத்தினர் மட்டும் ‘சாச்சு’ என்று அழைப்பார்கள். எப்படி மகா பெரியவரின் படைப்பான ‘தெய்வத்தின் குரல்’ பக்தர்களால் ஏற்றிப் போற்றப்படுகிறதோ, அதே அளவிற்கு ஸ்ரீசிவன் சாரின் ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள்’ என்ற அற்புதப் படைப்பும் உள்ளது. இதில் கல்வி, வானவியல், விலங்கியல், சரித்திரம், புவியியல், ஜோதிடம், கணிதம், தொல்பொருள், ஆன்மிகம், அரசியல், தர்ம சாஸ்திரம்… என்று அனைத்து விஷயங்களுமே சொல்லப்பட்டுள்ளன. அத்தகைய மஹானின் சில அரிய புகைப்படங்களுடன் அவரது சரித்திரக் குறிப்புகள், சிந்தனைகள், மகிமைகள் போன்றவை இந்நூலில் சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. – பரக்கத் நன்றி: துக்ளக் 10-10-12