சி. மோகன் கட்டுரைகள்
சி. மோகன் கட்டுரைகள், நற்றிணை பதிப்பகம், ப.எண்123ஏ, பு.எண் 243ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 380ரூ.
தமிழ்க் கலை உலகத்தின் ஏதாவது ஒரு திக்கு நோக்கி நடப்பவராக நீங்கள் இருந்தால் நிச்சயம் சி.மோகனை சந்தித்திருக்கலாம். அவரது கைபடாத இலக்கியமோ, புத்தகமோ கடந்த 40 ஆண்டுகளில் இருந்திருக்க முடியாது. ஒரு படைப்பைச் செதுக்குவதில் சி.மோகனின் லாவகம் அனைவராலும் உணரப்பட்டது. அதனால்தான் நவீன எழுத்தில் மிகப்பெரிய சலனம் ஏற்படுத்திய தனது ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலை சுந்தர ராமசாமி இவரை அழைத்து எடிட் செய்தார். அதேபோல, புத்தகங்கள் தயாரிப்பிலும் நவீன உத்திகளைப் பயன்படுத்தியவர் மோகன். அதற்கு எத்தனையோ புத்தகங்கள் சாட்சிகள். அவர் எழுதிய கட்டுரைகள் இப்போது மொத்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. படைப்பை சுவாரஸ்யமாக மட்டுமே பார்க்காமல் மனித அறமாகப் பார்ப்பவராக மோகன் அவரது ஒவ்வொரு கட்டுரையிலும் தெரிகிறார். நவீனத் தமிழ் இலக்கிய வியாபாரம் பெருத்துவிட்டிருக்கிறது. அறங்களுக்குப் பதிலாக அதிகார மிடுக்குகள், தார்மீகங்களுக்குப் பதிலாக சாதுர்யங்கள், அர்ப்பணிப்புகளுக்குப் பதிலாக வியாபார உத்திகள் என இன்று நவீன இலக்கிய வியாபாரம் செழித்துக் கொண்டிருக்கிறது என்ற வருத்தங்களின் ஊடாக கடந்தகாலத் தமிழ் இலக்கியங்களின் இலக்கியவாதிகளின் உன்னதங்களை மோகன் விளக்குகிறார். தன்னுடைய படைப்புகள் அல்லது தன்னுடைய கோஷ்டியினர் படைப்புகளை மட்டுமே வியந்தோதும் இன்றைய சூழலில் புயலிலே ஒரு தோணி ப.சிங்காரத்துக்காகவும், நாளை மற்றொரு நாளே நாகராஜனுக்காகவும், இடைவெளி சம்பத்துக்காகவும் ஒலிக்கும் குரலாக மோகனுடையது இருக்கிறது. கடற்கரையில் நிற்கும் ராய் சௌத்ரியின் உழைப்பாளர் சிலையின் வடிவமைப்பு கொச்சைப்படுத்தப்பட்டபோது, அதற்கு கம்பீரமாக எழுந்த ஒரே குரல் இவருடையது. பாரதி, புதுமைப்பித்தன் முதல் தருமு சிவராம், கோபிகிருஷ்ணன் வரை, வறுமையும் புலமையும் இணைந்து பயணித்த படைப்பாளிகளின் சொற்செழிப்பை மோகனது வார்த்தைகளில் படிக்கும்போது, தமிழ் இவ்வளவு பொக்கிஷங்களைக் கொண்டதா என்று பெருமிதம் ஏற்படுகிறது. தி. ஜானகிராமனின் எழுத்துக்குள் ஊடாடிய தவிப்பு, தருமு சிவராமின் கவிதைக்குள் எழுந்த சிலிர்ப்பு, க.நா.சு.வின் இலக்கியப் பங்களிப்பு, சி.சு. செல்லப்பாவின் அர்ப்பணிப்பு, எம்.ஆர். ராதாவுக்குள் எழுந்த கலகக்குரல், சரோஜாதேவின் நடையைச் சுற்றிச்சுழன்ற கேமரா, சந்திரபாபுவின் பாடலுக்குப் பின்னால் இருந்த வறுமை, எம்.பி.சீனிவாசனின் இசை, கே.சி.எஸ். பணிக்கர் மற்றும் எஸ்.தனபாலின் கையில் இருந்து பிறந்த இசைச்சித்திரங்கள், எழுத்துப் பிரதிகள் எங்கு கிடைத்தாலும் தேடித்தேடிச் சேகரித்த ரோஜா முத்தையாவின் ஆர்வம் என்று தமிழகக் கலைப்பரப்பில் கால் பதித்த அனைத்து ஆளுமைகளையும் உள்வாங்கிக் கொள்ளும் இந்தப் புத்தகத்தை சி.மோகன் கட்டுரைகள் என்பதைவிட தமிழ் கலைகளின் ஆவணமாகச் சொல்லலாம். அறம், யதார்த்தம், தர்க்கம் ஆகிய மூன்றையும் மட்டும் வைத்து படைப்பையும் படைப்பாளியையும் ஒரே பார்வை கொண்டு பார்க்கிறார். மொத்தத் தமிழ்க் கலையையும் புரிந்துகொள்ள இந்த ஒரு புத்தகம் போதும். -புத்தகன். நன்றி:ஜுனியர் விகடன், 17/10/2012.