நிமித்தம்
நிமித்தம், எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை வெளியீடு, 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, விலை 375ரூ.
விடிந்தால் திருமணம் செய்துகொள்ளப்போகிற தேவராஜுக்கு இரவில் உறக்கம் வரவில்லை. நாற்பத்தியேழு வயதில் திருமணம் செய்துகொள்கிற அவனுக்கு திருமணத்துக்கு முதல்நாளே வந்துவிடுவதாகச் சொன்ன நண்பர்கள் யாரும் வரவில்லையே என்கிற வருத்தம். காது கேளாமையால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் புறக்கணிப்பின் வலியையே தாங்கி வந்திருக்கும் அவன், தன் வாழ்வை அந்த இரவில் திரும்பிப்பார்க்கிறான். அவன் வாழ்வதாகச் சொல்லப்படும் தென் தமிழகத்தின் நாற்பதாண்டு அரசியல் சமூக நிகழ்வுகளாக இந்த நாவல் விரிந்து செல்கிறது. நாவலைப் படிக்கும் யாரும் தேவராஜுக்காக மனம் நெகிழ்ந்து ஈரக்கண்களைத் துடைத்துக் கொள்ளாமல் இருக்க இயலாது. அவனை சின்னவயதில் இருந்தே அப்பா புறக்கணிக்கிறார். அவருக்குப் பயந்து தாயும் அன்பை மறைத்துப் புறக்கணிக்கிறாள். மகன் மீதிருக்கும் அன்பை அவள் வெளிக்காட்டும் தருணங்கள் இந்த நாவலின் அபூர்வமான கணங்களாக தோற்றம் பெறுகின்றன. கனவுகளாக விரியும் இரண்டாவது அத்தியாயம் தரும் வாசிப்பனுபவம் தேர்ந்த வாசகர்களுக்கு இன்பம் அளிப்பதாகும். தேவராஜை பள்ளியும், இவ்வுலகும் காயப்படுத்தினாலும் அன்பான மனிதர்கள் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வாழ்வின் துயரங்களுக்கு இடையில் அவனுக்கு நம்பிக்கை ஒளி அவர்கள். நண்பன் ராமசுப்பு, சுதர்சனம்சார், அவரது மனைவி, ஜோசப் என்கிற ஊமைப்பையன். தேவராஜுக்கு ஒரு காதலும் உருவாகி அவனது வன்மமான தந்தையால் சிதறடிக்கப்படுகிறது. அதுபோல் அவன் பல இடங்களில் வேலை பார்க்கிறான். அங்கெல்லாம் சுவாரசியமான ஆண்கள், பெண்கள் அவர்களைப் பற்றிய கதைகள் எதிர்ப்பட்டு இந்த நாவலை வளர்த்தெடுக்கின்றன. இரண்டு ஆச்சிகளைக் கூட்டிக்கொண்டு காசிக்குப் போய்வரும் வேலை அவன் செய்தவற்றில் ஒன்று. ஒரு சிட்பண்ட்ஸில் வேலைபார்த்து முதலாளியை ஏமாற்றி காசு சேர்த்து பிடிபட்டு அடிவாங்கும் கேவலமும் அவனுக்கு ஏற்படுகிறது. அவனுக்கு ஏற்படும் எல்லா பிரச்னைகளின் போதும் அவன் தன் நண்பன் ராமசுப்புவிடம் போய் நிற்கிறான். இந்த நாவல் ஒருவிதத்தில் ராமசுப்புவின் நட்பைச் சொல்லும் நாவலும்கூட. தேவராஜ் ஒரு சமயம் காமத்தால் உந்தப்பட்டு ஒரு விலைமாதிடம் சென்று அவள் வயிற்றுத் தழும்பைப் பார்த்து மிரண்டு, பின்னர் அவளுடன் சேர்ந்து பரோட்டா கடையில் சாப்பிடப்போகிறான். இந்த மாதிரி அபூர்வமான எதார்த்த வாழ்வின் சம்பவங்களைக் கோர்க்க எஸ்.ராவால் மட்டுமே முடியும். நாவலை வாசித்து முடிக்கையில் ஒரு வாழ்வை வாசித்த உணர்வு மேலோங்குகிறது. நன்றி: அந்திமழை, 1/2/2014 நிமித்தம்