காலத்தின் திரைச்சீலை
காலத்தின் திரைச்சீலை, ட்ராட்ஸ்கி மருது, தொகுப்பு அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, எண் 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, விலை 300ரூ.
வாயால் சொல்லப்படுகிற வார்த்தைகளின் மூலம் பலநேரம் நமக்குப் பொய்யே கிட்டுகிறது. ஆனால் கோடுகள் ஒருபோதும் பொய்யே சொல்வதில்லை என்கிற ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் சொற்களுடன் தொடங்குகிறது அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ள காலத்தின் திரைச்சீலை ட்ராட்ஸ்கி மருது என்கிற நூல். நூலை கவிஞர் வெண்ணிலா தொகுத்துள்ளார். மருதுவின் தாயார் ருக்மணி, மனைவி ரத்தினம், தம்பி போஸ் ஆகியோர் மருதுவைப் பற்றிச் சொல்லும் ஈரம் படர்ந்த நினைவுகளை எழுத்தாக்கி இருக்கிறார். இது மருதுவின் பின்புலம் பற்றிய ஆழமான அறிமுகத்தைத் தருகிறது. கலைஞர்கள் மிகவும் மென்மையான இதயம் படைத்தவர்கள். மருதுவும் விதிவிலக்கல்ல. அவர் சின்ன வயதில் வளர்த்த ஜானி என்கிற நாய் பஸ்மோதி அடிபட்டு விழுந்ததற்கு உருகி அழுததில் இருந்து பல ஈரந்தோய்ந்த நினைவுகள் இந்நூலில் பலர் எழுதியிருக்கும் கட்டுரைகளில் வெளிப்பட்டுள்ளன. எஸ்.எஸ். ராஜேந்திரன், யாமினி கிருஷ்ணமர்த்தி, எஸ்.வி. ராஜதுரை, சா.கந்தசாமி, காசி ஆனந்தன், பேராசிரியர் மு. நாகநாதன், பா. செயப்பிரகாசம், இயக்குநர் மிஷ்கின், நாஞ்சில் நாடன், கலாப்ரியா, வ. கீதா, வீ. அரசு, வெ. இறையன்பு, இளையபாரதி, தமிழச்சி தங்கபாண்டியன், நாசர், ரா. கண்ணன் உள்ளிட்ட பல ஆளுமைகள் இந்நூலில் மருது பற்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். மருதுவின் நீண்ட நேர்காணல் ஒன்றையும் அப்பண்ணசாமி இந்நூலில் ஒழுங்குசெய்துள்ளார். வாசிக்க மட்டுமல்லாமல் காட்சி அனுபவமாகவும் இந்நூல் புகைப்படங்கள், ஓவியங்கள் ஆகியவற்றுடன் வெளியாகி உள்ளது.
—-
சந்தித்திருக்கிறீர்களா, எம்.பி. உதயசூரியன், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, விலை 90ரூ.
பிரதிபலன் பாராமல் பிறர் மீது அக்கறை காட்டும் நல்ல மனிதர்கள் பற்றிய தொகுப்பு இது. புதிய தலைமுறை இதழில் இந்த மனிதர்களைப் பற்றி பத்திரிகையாளர் எம்.பி. உதய சூரியன் எழுதியபோது இவர்கள் யாரும் தங்கள் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிடுகிறார். ஊருக்கே உதவி செய்யும் ஓடும் பிள்ளை, மந்திரம் மூலம் குணப்படுத்தும் மந்திரி சாமி, பண உதவி செய்யும் சிறுவாடு லட்சுமி போன்ற பல அன்றாட அபூர்வ சாமானியர்களை விறுவிறுப்பான நடையில் நடமாட விட்டுள்ளார். வாசித்த பின்னும் மனதைவிட்டு அகல மறுக்கும் வெள்ளை இதயங்கள். நன்றி: அந்திமழை, 1/2/2014