சிறுவர் கதைக்களஞ்சியம்
சிறுவர் கதைக்களஞ்சியம் (தொகுதி 3,4), மு.ரா. சுந்தரமூர்த்தி, குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, விலை 85+85ரூ.
சின்னஞ்சிறுவர்களின் வெள்ளை மனதில் நல்ல நல்ல கருத்துக்களை விதைகளாக விதைத்திருக்கிறார் ஆசிரியர். பெரிய பெரிய தத்துவ நூல்கள், ஞான நூல்களால் புரிய வைக்க முடியாத உயர்ந்த நீதிகளை, தர்மங்களை நியாயங்களை, நெறிமுறைகளை, நியதிகளை, சின்னஞ்சிறு கதைகளாக்கி போதிக்கும் உத்தியை இக்கதைக்களஞ்சியங்கள் வழியாகச் செய்துள்ளார். கதைகளில் மன்னர்கள், வியாபாரிகள், ஞானிகள், வரலாற்றுப் புருஷர்கள், புராண நாயகர்கள், சமகால நிகழ்வுகள் என்று களமாக எடுத்திருப்பது, சலிப்பில்லாமல் படிக்க உதவுகிறது. சிறுவர்களுக்கு கதை மட்டும் சொல்லக்கூடாது. கூடவே நீதியையும் போதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறியுள்ளது. சிறுவர்களுக்கு கதை சொல்ல விரும்புபவர்கள் படிக்க வேண்டிய எளிய வழிகாட்டி நூல். அதேசமயம் சிறுவர்களும் படித்துப் புரிந்துகொள்ளும் எளிய நடைச் சிறப்பு. நன்றி: குமுதம், 26/2/2014.
—-
ம.பொ.சி. எழுதிய என்னை வளர்த்த பாரதி, ம.பொ.சி. பதிப்பகம், 4வது முதன்மைச்சாலை, சி வியூ கார்டன், கபாலுசுவரர் நகர், சென்னை 115, விலை 60ரூ.
பள்ளியில் அதிகம் படிக்காத சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறையில் இருந்தபோது தமிழ் இலக்கியங்களைப் படித்து, தமிழில் பேரறிஞர் ஆனால். அவர் எழுதிய புத்தகங்கள், கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் பாட புத்தகங்கள் ஆயின. அவர் எழுதிய புத்தகங்களில் ஒன்று என்னை வளர்த்த பாரதி. பாரதியின் பெருமைகளை எடுத்துக்கூறும் ம.பொ.சி. நான் இலக்கியத்தில் ஆர்வம் கொள்ள பாரதியின் கருத்துக்களே காரணம் என்று கூறுகிறார். சிலம்புச் செல்வரின் மகள் மாதவி பாஸ்கரன் தந்தையின் பெயரில் பதிப்பகம் தொடங்கி இந்நூலை வெளியிட்டுள்ளார். விலை 60ரூ. ம.பொ.சி. எழுதிய சிலம்பில் ஈடுபட்டதெப்படி என்ற நூலையும், இந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை 50ரூ. நன்றி:தினத்தந்தி, 10/7/2013.